மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதாவை, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் கவர்னருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

இந்நிலையில், சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் செப்டம்பர் 26-ம் தேதி  எழுதிய கடிதத்துக்கு நேற்றுதான் சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளித்ததாகவும், சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டறிந்து கவர்னர்  பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளதால் விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.