உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனை ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் பெண் ஒருவர், அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்து போன சிறுமியின் பெற்றோர், டெல்லி குருகிராம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அந்த இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

ஆனால், அங்கு அந்த இளம் பெண்ணின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. முக்கியமாக, அந்த இளம் பெண் அந்த மருத்துவமனையிலேயே சுய நினைவு இழந்தார்.

இதனால், அந்த இளம் பெண் அந்த மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அப்படி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 6 வது நாள் அந்த இளம் பெண்ணை, அவரது படுக்கை அறையில் அந்த ஐசியூவு வார்டில் வைத்தே மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் 27 ஆம் தேதி கண் விழித்த அந்த இளம் பெண் தனது தந்தையை அழைத்து உள்ளார். அப்போது, அவரால் சரிவர பேச முடியாமல் இருந்ததால், தந்தையிடம் பேப்பரும் பேனாவும் கேட்டுள்ளார். அதன் படி, அந்த பெண்ணின் தந்தையும் ஓடிச் சென்று ஒரு பேப்பரையும் பேனாவையும் வாங்கி கொடுத்து உள்ளார்.

அந்த பேப்பரில் எழுதிய அந்த இளம் பெண், “என்னை இங்கிருந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்” என்று எழுத்து மூலமாக எழுதி காட்டி உள்ளார். இதனைப் படித்ததும் கடும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், மருத்துவமனை நிர்வாகத்துடன் சண்டைக்கு சென்று உள்ளனர்.

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், 376 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பதை கண்டுபிடித்தனர். ஆனால், அவரை போலீசார் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி கூறும் போது, “பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளான இளம் பெண், அவரது தந்தையிடம் “விகாஸ்” என்ற பெயரை தான் கூறியிருக்கிறார். அந்த பெயரை வைத்து தான் நாங்கள் குற்றவாளியைக் கண்டறிந்தோம். அங்கு நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், அந்த விகாஸ் என்ற நபர், அந்த மருத்துவமனையில் பணிபுரிவர் இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது. 

மேலும், அந்த நபர் வெளியில் இருந்த வந்தவர் என்பது தெரிய வந்தது. அத்துடன், சம்மந்தப்பட்ட நபர் தொடர்பான அனைத்து விபரங்களையும் சேகரித்த பின்னர் அவரை கைது செய்வோம்” என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, “ஒரு பெண் நோயாளியை ஆண் மருத்துவர் எப்படி கையாள முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “என் மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார். இது தான் மருத்துவமனை தரும் பாதுகாப்பு லட்சனமா? என்றும், அவர் கோபமாகப் பேசினார். இதனால், அங்கு அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது.