“ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை” அமெரிக்காவுக்கு தலீபான்கள் கடும் எச்சரிக்கை

“ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை” அமெரிக்காவுக்கு தலீபான்கள் கடும் எச்சரிக்கை - Daily news

“ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பெரும் பிரச்சினை ஏற்படும்” என்று, அமெரிக்காவுக்கு தலீபான்கள் மிக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் மற்றும் இது வரையில் ஆட்சி அதிகாலத்தில் இருந்த அனைவரும் ஏறக்குறைய அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகிறார்கள் என்பதை கடந்த காலங்களில் உலகமே வேடிக்கை பார்த்தது.

அதில் முக்கியமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த வாலி முகமது அகமது சாய் என்பவர் கூட, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு நாட்டிற்குச் சென்றார்.

நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த வாலி முகமது அகமது சாய், அங்குள்ள காபூல் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

“ஒரு ராணுவ தளபதிக்கே இந்த நிலைமையா?” என்று, உலகம் முடிவதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் இணையத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, அவரும் மற்றொரு நாட்டிற்குத் தப்பிச் சென்றார்.

அதே போன்று, ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சையத் அஹ்மத் சதாத், கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் இடம் பெற்றார்.  பின்னர், அஸ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, அவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனி சென்றடைந்த சையத் அகமது சதாத், அங்குள்ள லீப்ஜிக்கில் வசித்து வருகிறார். அத்துடன், ஜெர்மனி நாட்டிற்கு குடிபெயர்ந்த சையத் அகமது சதாத், கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்த பிறகு, ஜெர்மன் நிறுவனமான லிவ்ராண்டோவில் உணவு விநியோகம் செய்யும் பணியினை செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் தொடர்ந்து வெளியானது.

அத்துடன், ஆப்கானில்ஸ்தானில் பெண்களுக்கு எதிரான தடைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தன. இதனால், உலக நாடுகளில் பலவும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தன. இதன் காரணமாக, உலக நாடுகளில் இருந்து வந்த உதவிகளும் அந்நாட்டிற்கு கிடைக்காமல் அப்படியே தடை பட்டது.

இதனால், அங்கு பசி பட்டினி ஏற்பட்டதாகவும், மக்கள் அனைவரும் பெருமாபாலும் வறுமையில் வாடுவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை என்கிற தகவலும் வெளியானது.

அதுவும், சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலீபான்களுடன் நல்லுறவை பேணி வருவதுடன், தலீபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தான், “ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும்” என்று தலீபான்கள் அமெரிக்காவை எச்சரித்து உள்ளனர்.

இது தொடர்பாக தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும் என்றும், அது உலக பிரச்சினையாக மாறும்” என்றும், எச்சரிக்கையாகவே கூறினார். 

“இதனால்,  உலக பிரச்சினையாக கூட அது மாறும் என்றும், தலீபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாததே” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்றும், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம்” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமை என்றும், போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதி அளித்துள்ளது” என்றும், அவர் தெரிவித்தார். 

இதனிடையே, “ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை ஏற்படும்” என்று,  அமெரிக்காவுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment