உலகில் மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடம் பிடித்துள்ள நிலையில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளன.

இது குறித்து சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிடியூட் பார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் வெளியிட்டுள்ள “குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022” அறிக்கையில், “உலகின் 163 சுதந்திர நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் இடம் பெற்று இருக்கிறது.

அதில், “உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து முதல் இடம்” பிடித்து உள்ளது.

அந்த பட்டியலில், “நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இடம் பெற்று உள்ளன. 

இந்த பட்டியலில், நியூசிலாந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக அமைதியான நாடாகவே 2 வது இடத்தில் இருக்கிறது.

அதே போல், கடந்த ஆண்டு 8 வது இடத்தில் இருந்த அயர்லாந்து, தற்போது 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

இந்த பட்டியலில், டென்மார்க் கடந்த ஆண்டு 3 வது இடத்தில் இருந்து, தற்போது 4 வது இடத்திற்கு பின் தங்கி உள்ளது.

இந்த பட்டியலில், 5 வது இடத்தில் ஆஸ்திரியாவும், போர்ச்சுகல் 6 வது இடத்திலும் இருக்கிறது. 

குறிப்பாக, கடந்த ஆண்டு சுலோவேனியா 4 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 7 வது இடத்திற்கு சற்றே சரிந்து உள்ளது. 

அதே போல், செக் குடியரசு 8 வது இடத்திலும், 9 வது இடத்தில் சிங்கப்பூர் நாடும் 10 இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகளும் இடம் பெற்று உள்ளன.

இந்த பட்டியலில், இங்கிலாந்து 2 இடங்கள் முன்னேறி 34 வது இடத்தில் இருக்கிறது. 

அதே போல், உலக வல்லரசான அமெரிக்கா, தற்போது அமைதியான நாடுகளின் பட்டியலில் 129 வது இடத்தில் உள்ளது. 

தெற்காசிய நாடுகளில், பூடான் 19 வது இடத்திலும், நேபாளம் 73 வது இடத்திலும், இலங்கை 90 வது இடத்திலும், வங்காள தேசம் 96 வது இடத்திலும் உள்ளன. 

முக்கியமாக, “குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022” வெளியிட்டு உள்ள இந்த அறிக்கையில், இந்தியா கடந்த ஆண்டை விட தற்போது 3 இடங்கள் முன்னேறி 135 வது இடத்தை பிடித்து இருக்கிறது.

அதாவது, கடந்த ஆண்டு இந்தியா, இந்த பட்டியலில் 138 வது நாடாக இருந்தது. தற்போது நடப்பாண்டான 2022 -ல், அமைதியின் அடிப்படையில் இந்தியா சற்றே முன்னேறி உள்ளதை, குளோபல் பீஸ் இன்டெக்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், அமைதியில் இந்தியா சற்றே முன்னேறி 1.4 சதவீதம் அளவுக்கு முன்னேற்றம் கண்டு உள்ளது என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இந்தியா, உள்நாடு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூக பாதுகாப்பு ராணுவமயமாக்கலின் அளவு உள்ளிட்ட 23 அளவுருக்களை கொண்டு இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டு” இந்த மதிப்பீட்டு குறியீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், “குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022” அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

மிக முக்கியமாக, இந்த பட்டியலில் பாகிஸ்தான் 147 வது இடத்தில் உள்ளது.  அதே போல், இந்த ஆண்டும் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் அதாவது 163 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.