தமிழக ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்து உள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசிற்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார் என்றும், நீட் தேர்வு ரத்து மசோதாவை சட்ட சபையில் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்த  நிலையில், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் அதனை அவர் திருப்பி அனுப்பிவிட்டார்” என்று, தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இப்படியாக, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் ஒரே அணியாக திரண்ட ஒட்டுமொத்தமாக ஆளுநருக்கு எதிராக, கடந்த பிப்ரவரி மாதம் திரண்டு நின்று கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தன.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. அப்படி நடத்தப்படுவது தமிழக அரசியலில் அதுவே முதன் முறை என்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்பட்டது. இந்த தருணத்தில், நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தல் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அதனை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஏழை, எளிய மாணவர்களை ஓரங்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட தேர்வே நீட் தேர்வு” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, ““சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும் என்றால், இந்திய மாநிலங்களின் கதி என்ன?” என்றும், பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் கேள்வியையும், அவர் எழுப்பினார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நீட் விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர். 

இவற்றுடன், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து திரும்பப் பெற வேண்டும்” என்றும், மத்திய அரசுக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் தான், “தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, திமுக தற்போது மீண்டும் போர் கொடி தூக்கி உள்ளது.

இது குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு, இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்து உள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 200 ன் படி ஆளுநர் தனக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளை செய்ய தவறுகிறார் என்றும், சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார்” என்றும், அதில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார். 

“தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து உட்பட 3 முக்கிய சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும்” அந்த மனுவில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டி, அந்த நோட்டீசை தாக்கல் செய்து உள்ளார். இதனால், இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் எதிரொலித்த நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.