இந்து பட்டியலில் இருந்து எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களை நீக்க வேண்டும் என்றும் அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரபிரதே மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை தேசிய பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.   அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்,  எஸ்சி- எஸ்டி மக்கள் மதம் இல்லா மண்ணின் மைந்தர்கள்.  இவர்களுக்கு மதமுமில்லை சாதியுமில்லை என்று தெரிவித்தார். 

மேலும் இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக இவர்களுக்கு இந்துக்கள் என்று சான்றிதழ் வழங்கி வருகிறோம்.  இந்துக்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டு இருக்கிறோம். இதுவே அந்த மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். எஸ்சி, எஸ்டி மக்களை  பொருளாதார ரீதியாக கல்வி வேலை வாய்ப்பில் மேம்படுத்தவும் அவர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் அக்கறை செலுத்தவில்லை. ஆகவே அவர்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

மேலும் அம்பேத்கர் , அயோத்திதாசர் ஆகியோர் விரும்பியபடி அவர்கள் இந்து இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் .  அல்லது எஸ்சி- எஸ்டி மக்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் பெறுவதில் நெருக்கடியை சந்திக்கின்றார்கள் என்றும்,   கல்வி பெறுவதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் சாதி சான்றிதழை தர முடியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறிய திருமாவளவன்,  அதனால் அவர்களுக்கு சாதி சான்றிதழ் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.