டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அந்த வகையில், சப்தர்ஜங் சாலையில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டிற்கு நேரில் சென்று, அவரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியாக. 13 ஆயிரத்து 504 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் கல்வி மற்றும் உணவு பாதுகாப்பு திட்டம் உள்ளிட்டவற்றிற்காக, நான்காயிரத்து 545 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்திற்கான 20 ஆயிரத்து 860 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். நிதி நெருக்கடியிலிருந்து தமிழகம் மீண்டு வர, குறிப்பிட்ட தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினார். வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதை, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது நீட்டித்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.இந்த சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடனிருந்தார்

அதனைத்தொடர்ந்து, டெல்லியின் மேற்கு வினோத் நகரில் உள்ள, டெல்லி அரசு மாதிரி பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அவரை பள்ளி மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பின்பு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இதையடுத்து அங்குள்ள மாடர்ன் பள்ளிகள் செயல்படும் விதம் மற்றும் அங்கு நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் ஆகியவை, முதலமைச்சருக்கு வீடியோ வாயிலாக விளக்கப்பட்டது. பின்பு, மாணவர்களின் கண்காட்சி, பள்ளியில் நடைபெறும் மனமகிழ்ச்சி மற்றும் தேசப்பற்று தொடர்பான வகுப்புகளையும், அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள நீச்சல் குளம் போன்ற வசதிகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

மேலும் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள மொஹாலா கிளினிக்குகளை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது, டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் இருந்தனர்.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை மு.க.ஸ்டாலின் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது, சேலம் உருக்கு ஆலையின் மிகை நிலத்தை பாதுகாப்பு தொழில் பூங்கா-வுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல, காலணி உற்பத்தித் துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச் சலுகை உற்பத்தி திட்டத்தை அறிவிக்க வேண்டும், பட்டு இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை இன்றுமாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 2013-ம் ஆண்டே திமுகவுக்கு இடத்தை மத்திய அரசு ஒதுக்கிவிட்ட போதிலும், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் முடிந்துள்ளன.

மூன்று தளங்கள் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காக பெரிய அரங்கம் உள்ளது. முதல் தளத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசும் இடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. முதல் தளத்திலும், 2-ம் தளத்திலும் கருத்தரங்கு அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்குவதற்காக அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி,  பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். 

ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய 'கருணாநிதி ஏ லைஃப் என்ற நூலை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார். பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய ''ஏ திராவிடன் ஜார்னி'' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெற்றுக் கொண்டார். கட்டிடத்தின் 3வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.