“பிச்சை எடுத்தோ திருடியோ கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்” என்று, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாக பதில் அளித்துள்ளது, வைராகி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், தலைநகர் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அங்கு முழு நேர ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. 

முக்கியமாக தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளதாகவும், அங்கு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 249 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.  

இப்படியாக டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், நாடாளுமன்ற மாநிலங்களவை ஊழியர்களை அனைவரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை, அவரவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்களவை ஊழியர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா 2 வது அலையில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுவதால், ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை முன்பைவிட தற்போது அதிகரித்து உள்ளது. 

இதனால், வரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் தேவை எந்த அளவுக்கு இருக்கும் என மத்திய அரசு கணித்து உள்ளது.

அதே நேரத்தில், டெல்லி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருந்தன.

இது தொடர்பாக டெல்லியில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 
“டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசை இருகரம் குவித்து கேட்கிறேன்” என்று, பதிவிட்டு இருந்தார். இது, டெல்லி மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இந்த சூழ்நிலையில் தான், டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான அவசர வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மருத்துவமனையில் விநியோகிக்கும் இடத்திற்குக் கொண்டு செல்ல பாதுகாப்பான வழிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்” என்று, வலியுறுத்தி இருக்கிறது. 

அத்துடன், “மத்திய அரசு ஏன் தற்போது உள்ள எதார்த்ததை புரிந்துகொள்ளவில்லை? என்றும், கள நிலவரத்தை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது?” என்றும், அடுத்தடுத்து நீதிபதி கேள்வி எழுப்பினார். 

குறிப்பாக “எதையாவது செய்யுங்கள், பிச்சை எடுங்கள், ஆக்சிஜன் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கெஞ்சுங்கள், மக்கள் செத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், “மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இது உணர்ச்சிகரமான சூழல்” என்றும், குறிப்பிட்டார். 

முக்கியமாக, “எஃகு தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தொழில் நிறுவனங்கள் மருத்துவப் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்” என்றும், நீதிபதி வலியுறுத்தினார்.

அவசர வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர், மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம், மத்திய, டெல்லி அரசுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க விடுத்த கோரிக்கையையும் இதில் சுட்டிக்காட்டி இருந்தார். 

மேக்ஸ் மருத்துவமனையில் தற்போது 3 மணி நேரத்திற்கு வழங்குவதற்கு மட்டுமே ஆக்சிஜன் இருக்கிறது என்றும், இந்த ஆக்சிஜன் தீர்ந்து விட்டால், 262 கொரோனா நோயாளிகள் உள்பட 400 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறும் என்றும், சில நோயாளிகள் வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்றும், மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “பிச்சை எடுத்தோ திருடியோ கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்” என்று, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகப் பதில் அளித்துள்ளது, இந்தியா முழுவதும் தற்போது வைராகி வருகிறது.