“கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” என்று, நித்தியானந்தா அதிரடியாக அறிவித்து உள்ளார்.

கொரோனா என்னும் பெருந் தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்தியாவில் அந்த வைரஸ் மிக தீவிரம் அடைந்து வருகிறது.

“இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா பரவல் காரணமாக, இந்தியா செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று, அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அதனையும் மீறி, இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருக்கிறது என்றும், தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் 
இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என்றும், அமெரிக்கா எச்சரித்து உள்ளது.

இதன் காரணமாக, இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த அமெரிக்கர்கள் பலரும், தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2 வது இடத்திலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான், “கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” என்று, நித்தியானந்தா அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

அதாவது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா, இந்தியாவிலிருந்து தப்பித்து ஆஸ்திரேலியா அருகே உள்ள ஒரு தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அங்கு குடியேறி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் நித்தியானந்தா தலைமறைவானார் என்று கூறப்படுகிறது. 

ஆனாலும், அவ்வப்போது யூட்யூபில் தோன்றி பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் நித்தியானந்தா, கைலாசா என்ற ஒரு நாட்டை புதிதாக உருவாக்கி இருப்பதாகவும் அறிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, கைலாசா நாட்டிற்கு என்று தனிநாடு தகுதிக்கோரி ஐநாவிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் அவர் கூறியதாக தொடரந்து செய்திகள் வெளியானது. 

இதன் காரணமாக, நித்யானந்தா புதிதாக உருவாக்கிய கைலாசா நாடு, சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. அந்தத் தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்து அதன் தலைவராக நித்தியானந்தா, தன்னை தானே அவர் பிரகடனப்படுத்திக்கொண்டார். இது, நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டன. 

அத்துடன், கைலாசா நாட்டிற்கு என்று தனியாக வலைத்தளம் ஒன்றையும் அவர் உருவாக்கி இருந்தார். 

மிகப் பெரிய ஆச்சரியமாக, உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில், கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கியைத் திறந்திருப்பதாகவும், பணம் என்ற பெயரில் சில தங்க நாணயங்களையும் அவர் வெளியிட்டு அனைவருக்கும் அடுத்தடுத்து ஷாக் கொடுத்தார் நித்தியானந்தா. இதனால், இந்தியாவே அவரை திரும்பிப் பா்த்து. என்னதான் அவர் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தாலும், இந்திய போலீசாரால் அவரை கிட்ட நெருங்கக் கூட முடியவில்லை.

இப்படியான நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்தியானந்தா, “இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை” என்று, தெரிவித்து உள்ளார். 

அதாவது, “இந்தியாவில், கொரோனாவின் 2 வது அலை தீவிரமாகப் பரவி வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி இல்லை” என்று, அவர் திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார். 

மேலும், “ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும், நித்தியானந்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால், நித்தியானந்தாவின் இந்த செய்தி, இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.