இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார். 

வல்லரசு நாடானா சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதாவது, இந்தியாவில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70 சதவீதம் வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இதில், நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதுவுமு், அதிகப்படியான மின் தேவை உள்ளதால், அதிக நிலக்கரி தேவை ஏற்பட்டு தட்டுப்பாடு நீடிக்கிறது என்றும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அத்துடன், வல்லரசு நாடாகத் திகழும் சீனாவில் மிகப் பெரிய அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதனால், அந்நாட்டில் பெரிய அளவில் தொழில்கள் அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டில் நிலக்கரிக்கு தேவை முன்பை விட இன்னும் அதிகமாகி உள்ளது. 

இந்த நிலையில், தேவையான நிலக்கரியை உற்பத்தி செய்கிற வெளி நாடுகளில் நிலக்கரியின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகமாக உயர்ந்து உள்ளது. 

இதனால், உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே நம்பி இருப்பதே இந்தியாவின் நிலக்கரி பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 

மேலும், நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக டெல்லி மாநில அரசு முதல் முறையாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. 

அதாவது, “டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது என்றும், நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால், அடுத்த 2 நாட்களில் தலைநகர் டெல்லியில் மின்தடை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்” டெல்லி முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். 

அதே போல், “பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அதே போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால், சில நாட்களில் இந்தியாவின் பல நகரங்கள் முழுமையாக மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் செய்திகள் உலா வந்துகொண்டு இருக்கின்றன. 

எனினுமு், “இந்தியாவில் போதிய நிலக்கரி கையில் இருப்பதாகவும், இதனால் மின் தடை ஏற்படாது” என்றும், மத்திய அரசு விளக்கம் கூறியிருந்தது.

அதாவது, கொரோனா 2 வது அலை இந்தியா முழுவதும் உச்சத்திலிருந்த போது ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட தொடக்கத்தில், “நாட்டில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால், தட்டுப்பாடு என்றே பேச்சுக்கே இடமில்லை” என்று, மத்திய அரசு அப்போதே விளக்கம் அளித்தது. ஆனால், மத்திய அரசு விளக்கம் அளித்த அடுத்த சில நாட்களிலேயே நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடியது.

அதே போன்ற நிலை, இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் தொடரக்கூடாது என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், நாட்டில் நிலவிவரும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இந்த அவசர ஆலோசனையில் துறை ரீதியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, “தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை” என்று, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.