“இந்தியாவில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமாக இருப்பது ஏன்?” என்று, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் தினம் தினம் பெட்ரோல், டீசல் விலைகளும், கால இடைவெளியில் சமையல் காஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதனால், நாட்டில் உள்ள சாதாரண மற்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அத்துடன், “பணம் தேவைப்படும்போதெல்லாம் மத்திய அரசு விலையை உயர்த்தி, லட்சக்கணக்கான கோடி ரூபாயை மக்களிடம் இருந்து பறித்துக் கொண்டே வருகிறது” என்று, பலரும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனால், “பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி தயாராக இல்லை” என்றும், ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

அத்துடன், “இந்தியாவில் உள்ள கோடான கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வரும் நிலையில், தொடர்ந்து அதன் சுமையை ஏற்றி வருவது மக்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதை காட்டுகிறது” என்றும், எதிர் கட்சிகள் கூறிவருகின்றன.

இந்த நிலையில் தான், “விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமா?” என்று, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டில் அதிகரிக்கும் பண வீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை போன்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாக” மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “பிரதமர் ஆக்ரோஷம் - கேமரா மற்றும் புகைப்படம் இல்லாமை, உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள்” என்றும், ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்பை செய்திருப்பதாக” ராணுவ தளபதி எம்.எம். நரவனே கூறியதை மேற்கோள்காட்டிய ராகுல் காந்தி வெளியிட்ட மற்றொரு பதிவில், “இந்திய மண்ணில் சீனர்கள் தங்க போகிறார்களா?” என்றும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

இதனிடையே, பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரப் பிரதேசம் வாரணாசியில் விவசாயிகளுக்கு நியாயம் கேட்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு விற்கிறது. கியாஸ் சிலிண்டர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை பற்றி அரசுக்கு கவலை இல்லை என்றும், வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியின் நண்பர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அவருடைய நண்பர்களுக்கு தாரைவார்க்கப் படுகின்றன” என்றும் மிக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “லகிம்பூர் சம்பவம் தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும், என்னை ஜெயிலில் போட்டாலும், அவர் ராஜினாமா செய்யும் வரை சிறையில் இருந்தபடியே நான் போராடுவேன்” என்றும் கூறினார். 

“நான் லகிம்பூர் சென்றபோது, போலீசார் தடுத்தனர். ஆனால் குற்றவாளிகளை பிடிக்க அவர்களால் முடியவில்லை. உலகம் முழுக்க செல்லும் மோடியால், விவசாயிகளை பார்க்க முடியவில்லை” என்றும், மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.