தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக திகழும் ஜீவி பிரகாஷ் குமார் நடிகராகவும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயில் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் காதலிக்க யாருமில்லை, இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் செல்ஃபி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் முதல்முறையாக "டிராப் சிட்டி"(TRAP CITY) எனும் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் நடிகராக களமிறங்குகிறார் ஜீவி பிரகாஷ் குமார். 

அடுத்தாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும்  இடிமுழக்கம் திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் அவர்கள் தயாரித்திருக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. 

முன்னதாக  ஜீவி பிரகாஷ் குமார் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்திருந்தார். இந்நிலையில் இடிமுழக்கம் படத்தின் கதாநாயகியான நடிகை காயத்ரி தற்போது தன்னுடைய டப்பிங்கை நிறைவு செய்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விரைவில் இடிமுழக்கம் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.