உலக நாடுகள் கடந்த 2000 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு கால கட்டத்தில் சந்தித்துள்ள இயற்கை பேரிடர்களை ஐ.நா.வுக்கான பேரழிவு அபாய குறைப்புக்கான அலுவலகம் கணக்கெடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 3-வது இடத்தை பெற்று உள்ளது.

அந்த வகையில் சீனா 577 பேரிடர் நிகழ்வுகளை இந்த 20 ஆண்டில் சந்தித்து உள்ளது. அடுத்ததாக அமெரிக்கா (467 நிகழ்வுகள்), இந்தியா (321), பிலிப்பைன்ஸ் (304), இந்தோனேஷியா (278) போன்ற நாடுகளும் அதிக நிகழ்வுகளை சந்தித்து இருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் பன்முக நிலவகை மற்றும் அபாய பகுதிகளில் அடர்த்தியான மக்கள் தொகையையும் கொண்டிருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.ஒட்டுமொத்தமாக முதல் 10 நாடுகளில் 8 நாடுகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை ஆகும். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய நாடுகள் 3,068 பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வட, தென் அமெரிக்கா கண்டங்கள் 1,756 நிகழ்வுகளையும், ஆப்பிரிக்கா 1,192 நிகழ்வுகளையும் சந்தித்து இருக்கின்றன.
 
இந்த பேரிடரில் கொரோனா போன்ற உயிரியல் சார்ந்த இடர்களை கணக்கில் கொள்ளவில்லை என கூறியுள்ள பெல்ஜியம் பல்கலைக்கழக பேராசிரியர் தேபராத்தி குகா, பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ள தவறியதும், பசுமைக்கூட வாயுக்கள் அதிகமாக உற்பத்தி செய்வதுமே மனித குலத்தின் இத்தகைய துன்பத்துக்கு காரணம் எனவும் தெரிவித்தார். இதே நிலை அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நீடித்தால் மனித குலத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இயற்கை பேரிடரிலிருந்து மக்களை காக்கும் வகையில், அரசு தரப்பில் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிவாரணத் தொகையாக ரூ.4382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளுக்கு மத்திய நிவாரண உதவியாக ஆறு மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4,382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பாண்டு புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண உதவியாக மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நிவாரணநிதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கு வங்கத்திற்கு ரூ.2,707.77 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.128.23 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ. 268.59 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ. 577.84 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.611.61 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.87.84 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வடகிழக்கு பருவமழைக்காலம் நிகழ்ந்து வருவதால், தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  

இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளி நாளன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதேபோன்று தெற்கு கேரளத்திலும் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 17-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது