தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 2008-ம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் 2010-ம் ஆண்டு ஈசன் எனும் படத்தை இயக்கினார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய அனைத்து படங்களும் ஹிட். கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதன் பின் தனுஷ் உடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். 

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பொன். ராம் - சசிகுமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் எம்ஜிஆர் மகன். கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குனர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்து முடிந்தது. 

சசிகுமாருடன் இணைந்து சத்யராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் நடிகை மிருணாளினி ரவி. படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். 

படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ட்ரைலரை வெளியிடுகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சசிகுமார் கைவசம் முந்தானை முடிச்சு ரீமேக்கும் உள்ளது. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.