ஆயுர்வேத நாளையொட்டி குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் ஆயுர்வேத கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவம்பர் 13) தொடக்கி வைத்தார்.

அதன் பின்னர் காணொலி வழியாக உரையாற்றிய அவர், ``ஒருங்கிணைந்த மருத்துவ உலகில் ஆயுர்வேதம் மிகமுக்கிய பங்காற்றுவதாகக் கூறினார். பண்டைய இந்தியாவின் பாரம்பரியம் மிக்க அறிவியல் 21-ஆம் நூற்றாண்டின் அறிவியலோடு ஒருங்கிணைகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மஞ்சள் போன்ற இந்தியாவின் பாரம்பரியம் மிக்க ஆயுர்வேத பொருள்களுக்கு உலக அளவில் தேவை அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.

''நம் நாட்டில் அதிக அளவிலான மக்கள் தொகை இருந்தாலும், மஞ்சள் போன்ற பொருள்களை வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தியதால் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால், மஞ்சள், அஸ்வகந்தா போன்ற மூலிகைப் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது'' என்று குறிப்பிட்டார். 

ஆயுர்வேத கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதேனாமுடன் தொலைபேசி மூலம், உரையாடி ஆயுர்வேதம் குறித்து பேசியிருந்தார். அப்போது, கோவிட்-19 பெருந்தொற்று நோய் பாதிப்பை கையாள்வதில் உலக அளவில் கூட்டு முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்துவதில், உலக சுகாதார நிறுவனம் முக்கிய பங்கு வகித்தமைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துக் கொண்டார். மற்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் கவனத்தை இழந்துவிடக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். வளரும் நாடுகளில் சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளித்து வருவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய சுகாதாரத் துறையினருக்கும், உலக சுகாதார அமைப்பிற்கும் இடையில் நெருக்கமான, தொடர்ந்து கூட்டு செயல்பாடுகள் இருப்பது பற்றி டெட்ராஸ் அதேனாம் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், காசநோய்க்கு எதிரான இந்தியாவின் முயற்சிகள் போன்ற உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை அவர் பாராட்டினார். உலக சுகாதாரப் பிரச்சினைகளில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாரம்பரிய மருத்துவ முறைகளின் மதிப்பு குறித்து  டெட்ராஸ் அதேனாமும், பிரதமரும் ஆக்கபூர்வ கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டனர். குறிப்பாக ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துதலில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கு பற்றி அவர்கள் கலந்தாடல் செய்தனர். முழுமையான சிகிச்சை முறைகளில் நவீன மருத்துவத்துடன், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் உள்ளதை இருவரும் ஒப்புக்கொண்டனர். பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் மற்றும் நடைமுறைகளை கவனமாக அறிவியல்பூர்வ ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

பாரம்பரிய மருந்துகளின் செயல்திறன் இதுவரையில் போதிய அளவுக்கு மேன்மையாக முன்வைக்கப்படவில்லை என்று டெட்ராஸ் அதேனாம் கூறினார். இந்தத் துறையில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகளை ஊக்குவிக்க உலக சுகாதார நிறுவனம் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவில் ஆயுர்வேத தினம் கொண்டாட திட்டமிடப் பட்டிருப்பது பற்றியும் பிரதமர், டெட்ராஸ் அதேனாமிடம் கூறினார். `கோவிட்-19 சிகிச்சைக்கு ஆயுர்வேதம்' என்ற தலைப்பில் இந்த தினம் கொண்டாடப் படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள உலக அளவில் கூட்டு செயல்பாடுகள் குறித்து பிரதமரும், டெட்ராஸ் அதேனாமும் கலந்துரையாடினர். தடுப்பு மருந்துகள் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு என்ற வகையில், தங்கள் திறன்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில், பிரதமர் தீவிர முயற்சிகள் எடுத்தமைக்கு டெட்ராஸ் அதேனாம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.