மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் பிஸ்கோத். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. ரதன் மற்றும் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளனர். 

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாகுபலி படத்தையும், 300 பருத்திவீரர்கள் படத்தையும் கிண்டல் செய்வது போல் அமைந்துள்ளது. லொள்ளு சபா பாணியில் ட்ரைலர் உள்ளது என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். ஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், சவுகார் ஜானகி, மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் 18-ம் நூற்றாண்டில் வாழந்த அரசனாக சந்தானம் நடிக்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தார். கிட்டதட்ட 30 நிமிடம் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது என விவரித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியது. சென்ற லாக்டவுனில் இந்த படத்திற்காக தனது டப்பிங் பணியை நிறைவு செய்தார் சந்தானம். 

பிஸ்கோத் படத்தின் முதல் சிங்கிளான பேபி சாங் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. யோகி பாடிய இந்த பாடல் வரிகளை ரதன் எழுதியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா டிஜிட்டல் தளத்தில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ ஜுக் பாக்ஸை வெளியிட்டது படக்குழு. பிஸ்கோத் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் சின்ன பிள்ளை போலே பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. பூர்ணிமா மற்றும் முஜிப் ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை எழுதி இசையமைத்திருந்தார் ரதன். இந்நிலையில் படத்தின் நகைச்சுவையான முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. பாகுபலி படத்தின் காட்சிகளை கிண்டலடித்து காமெடி செய்துள்ளார் சந்தானம். கட்டப்பாவாக ராஜேந்திரன் நடித்துள்ளார். 

பிஸ்கோத் படத்தை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார் சந்தானம். சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.