பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கபடதாரி. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. தமிழக அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததால், கபடதாரி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் நடந்து முடிந்தது. சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா இந்த போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்தனர் சிபிராஜ் ரசிகர்கள். சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளம் முழுவதும் காமன் DP வெளியிட்டும் அசத்தினர் இணையவாசிகள். இதனையடுத்து இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது. 

கபடதாரி படத்திற்கு ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்ஜெயன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். கு.கார்த்திக் மற்றும் அருண் பாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளனர். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. சத்யா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரசமதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரவீன் KL எடிட்டிங் செய்கிறார். படத்தின் மீதம் இருந்த டப்பிங் பணியை சமீபத்தில் நிறைவு செய்தார் சிபி சத்யராஜ். படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸரை வெளியிட்டார் இசைப்புயல் AR ரஹ்மான். 

வெளியான டீஸரை பார்க்கையில் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ராஃபிக் போலீஸாக இருக்கும் சிபி சத்யராஜ், நடக்கும் குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கபடதாரி படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.