பாலியல் துன்புறுத்தல் செய்து, 17 வயது சிறுமியை 3 இளைஞர்கள் சேர்ந்து மாடியிலிருந்து கொடூரமாகத் தூக்கி வீசிய சம்பவம் நெஞ்சை நடுநடுங்க வைத்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி நெஞ்சை பதைபதைக்க வைத்து உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, கொடூர சம்பவம் தொடர்பான ஒரு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில், “3 இளைஞர்கள் சேர்ந்து சிறுமி தங்கியிருக்கும் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து அவரை தாக்கியதாகத் தெரிகிறது. பின்னர், அந்த 17 வயது சிறுமி, மாடியிலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், தொப்பென்று கீழே வந்து விழுந்தார். 

சிறுமி, கீழே விழுந்த வேகத்தில், அந்த 3 இளைஞர்களும், சிறுமி உயிரோடு இருக்கிறாரா? என்று கிட்டே வந்து பார்த்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள்.

சிறுமி கீழே விழுந்த சத்தம் கேட்டு, அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியின் நிலையைப் பார்த்த அழுது துடிக்கிறார்கள். அப்போது, சிறுமிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிக்கொண்டு இருக்கிறது. இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அழுது” துடிக்கிறார்கள்.

இதனையடுத்து, படுகாயமடைந்த சிறுமியை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, “சிறுமி சுய நினைவுடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்” மருத்துவனை நிர்வாகம் கூறியுள்ளது.

அத்துடன், சிறுமி தாக்கப்பட்டு, மாடியில் இருந்து கீழே தூக்கிவீசப்பட்டது தொடர்பாக, சிறுமியின் தந்தை சம்மந்தப்பட்ட 3 இளைஞர்கள் மீதும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், “எங்கள் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 3 இளைஞர்கள், கடந்த சில மாதங்களாக எனது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்தனர்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், “கடந்த 21 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு ஒருவர் எனக்கு போன் செய்து, என் மகளிடம் பேச வேண்டும் என கூறினார் என்றும், நான் அதற்கு மறுத்துவிட்டேன் என்றும், அதற்கு அந்த இளைஞர் என்னை தகாத வார்த்தையில் திட்டிவிட்டு போனை வைத்து விட்டார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “நேற்று இரவு 8 மணி அளவில் 3 இளைஞர்கள், என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, என் மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார்கள் என்றும், அப்போது அவர்களுடன் ஏற்பட்ட மல்லுக்கட்டில் என் மகளைத் தூக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர் என்றும், அப்போது எனது குடும்பத்தினர் சத்தம் போட்டு கூச்சலிட தொடங்கியதால், அந்த 3 குற்றவாளிகளும், எனது மகளை 2 வது மாடியிலிருந்து தூக்கி கீழே வீசி விட்டுத் தப்பியோடி விட்டனர்” என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பகிரங்காக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உள்ளனர். அத்துடன், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை, 3 இளைஞர்கள் சேர்ந்து மாடியிலிருந்து தூக்கி கீழே வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.