“3 பெண்களில் ஒருவர் தங்களது வாழ் நாளில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள்” என்று, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“பெண்ணின்றி அமையாது உலகு!” என்னும் முதுமொழி இங்கே தாழ்த்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் கடந்த 8 ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பெண்களை மதிக்கும் பலரும், சக பெண்களும் தங்களுக்குப் பிடித்த பெண்களுக்கு மாறி மாறி வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், ஐ.நா. சுகாதார நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வில், உலக அளவில் கிட்டத்தட்ட 3 பெண்களில் ஒருவர் தங்கள் வாழ் நாளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி அதனை அனுபவிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்று, தெரிய வந்துள்ளது. 

இந்த ஆய்வில், “பெண்ணைகளைத் தவறான கண்ணோட்டத்தில் தொடுவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்” என்றும், அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பரவலாக இருப்பது” இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

“இது போன்ற வன்கொடுமைகள் 20 வயது அடையும் முன்பே தங்களுக்கு நெருக்கமான உறவுகளால் பெண்கள் அனுபவிக்க நேர்கிறது” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, இது வரை இல்லாத அளவிற்கு, இந்த கொரோனா காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது” என்றும், அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. 

இதில் முக்கியமாக, “அரசு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தான், குடும்ப வன்முறைக்கு மிகப் பெரிய காரணம்” என்றும், அதில் கூறப்பட்டு இருக்கிறது.
 
இவற்றுடன், “ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்கள் அதிக அளவு தங்கள் துணையால் மிக அதிகமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதும்” இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 

“உலகளவில் இது வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மிக நெருக்கமான உறவுகளாலேயே ஏற்பட்டுள்ளது என்றும், இதன் மூலமாக சுமார் 641 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், “இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 6 சதவீதம் பேர் வெளி நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம் என்றும், இந்த  

வன்முறை ஏழ்மை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது” என்பதும் தெரிய வந்திருக்கிறது. 

“சில நாடுகளில் அனைத்து தரப்பில் இருக்கும் பெண்களிலும் பாதிக்குப் பாதி பேர் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, “கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் டெல்லி முதல் இடமும், மும்பை 2 வது இடமும், பெங்களூரு 3 ஆம் இடமும் பிடித்துள்ளதாக” தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.