அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களில் இந்தியாவின் மூன்று நகரங்கள் உள்ளன. அதில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டெல்லியை மூன்றாவது இடத்துக்கு தள்ளி ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன.

சமீபகாலமாக வீட்டுக்குள்ளும் பாதுகாப்பு இல்லை, வீட்டை விட்டு வெளியில் வந்தாலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்துவிட்டது. குற்றங்களைத் தடுக்க முடியவில்லை என்று ஒரு பக்கம் கவலை கொண்டாலும், குற்றம் செய்தவர்களையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் தேவையான வசதிகள் இல்லை என்பதே.

தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க, பொது இடங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி இருப்பது அவசியம். சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை வைத்தே பல்வேறு விதமான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. சிசிடிவி உள்ள இடங்களில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் பலர் கூறுகின்றனர்.

ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான comparitech ஒவ்வொரு வருடமும் அதிகம் கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி 2020-ல் நடத்திய ஆய்வின்படி, உலகில் அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் 9 இடங்கள் சீனாவில்தான் உள்ளன. சீனாவில் உள்ள தையுவான் நகரில் 1,000 பேருக்கு சராசரியாக 119.57 சிசிடிவி உள்ளதாகக் கூறப்படுகிறது. டாப் 10 இடங்களில் மூன்றாவது இடத்தில் மட்டும் லண்டன் உள்ளது. மற்ற 9 இடங்களில் சீன நகரங்களே உள்ளன. அதாவது, மற்ற நாடுகளைக் காட்டிலும் 54 சதவிகித அதிக கேமராக்கள் சீனாவில் உள்ளன. அதேபோல், மூன்றாவது இடத்தில் இருக்கும் லண்டனில் 1,000 பேருக்கு சராசரியாக 67.47 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.  

ஹைதராபாத்தில் 1,00,04,144 பேருக்கு 3,00,000 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதாவது, ஹைதராபாத்தில் 1,000 பேருக்கு 29.99 சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அதேபோல், சென்னையில் 10,971,108 பேருக்கு 2,80,000 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகரிக்கக், குற்றங்களை கண்காணிக்கும் திறன் அதிகரிக்கும், குற்றங்கள் குறையும்.

உலகில் அதிகம் கண்காணிக்கப்படும் சீனாவில் 2022-ம் ஆண்டுக்குள் சராசரியாக இரண்டு பேருக்கு ஒரு சிசிடிவி கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பார்த்தால் நாடு முழுவதும் 62.6 கோடி சிசிடிவிக்கள் இருக்குமாம். 

சிசிடிவி பொருத்துவதன் அவசியத்தை உணர்ந்து, குற்றங்களைத் தடுக்க தமிழக அரசின் சார்பிலும் ஆணை பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிசிடிவி வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு விளம்பரங்களையும் நாம் பார்த்திருப்போம். இப்படியாகக் குற்றங்களைத் தடுக்க பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா, சரி வர இயங்குகிறதா, இல்லையா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டியதும் அவசியம்தான். அதேபோல், தனியார் நிறுவனங்களும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமாராக்களை தங்களது இடங்களில் பொருத்த முன்வர வேண்டும்.

பொது மக்களும் தங்களால் இயன்றளவு வீட்டின் முன் சிசிடிவி பொருத்தினால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியும். நமது வீட்டுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.