சீனாவின் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடைவிதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளதையடுத்து, அமெரிக்காவில் இதன் செயல்பாட்டு உரிமத்தை வாங்கும் முடிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கிடப்பில் போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி சீனப் பின்னணியைக் கொண்ட டிக் டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அமெரிக்கா சில முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டது. டிக்டாக் செயலி, தனிநபர் தகவல்களைக் கையாள்வது தேசிய அளவில் பாதுகாப்பற்றது என அமெரிக்கா கருதுகிறது. தகவல் திருட்டை தடுக்கும் நோக்கிலும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் டிக்டாக் செயலியைத் தடை செய்ய அமெரிக்கா முடிவு செய்தது.  

மேலும், அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து, டிக்டாக் செயலின் அமெரிக்கச் செயல்பாட்டு உரிமத்தைப் பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்த பின்னர், அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் மற்றும் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா இடையே நடந்த ஆலோசனையை தொடர்ந்து வாஷிங்டனை சேர்ந்த ரெட்வுட் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பைட் டான்ஸிலிருந்து டிக்டாக்கைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடருவதாகவும், மேலும் இது செப்.,15க்குள் ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக, மிகவும் முக்கியமான குடியரசுக் கட்சியின் எம்.பிக்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக் விற்பனையை ஆதரிக்குமாறு வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். பைட் டான்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அன்னிய முதலீட்டு குழு மேற்பார்வையில் நடைபெறும். அமெரிக்காவின் அன்னிய முதலீட்டு குழு, எந்த ஒரு ஒப்பந்தத்தை தடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

'ஒரு முழுமையான பாதுகாப்பு மறுஆய்வுக்கு உட்பட்டு டிக்டாக்கை வாங்குவதற்கும், அமெரிக்க கருவூலம் உட்பட அமெரிக்காவிற்கு சரியான பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது' என மைக்ரோசாப்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை மற்றும் பைட் டான்ஸ் நிறுவனங்கள் இது தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.


 இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள டிக் டாக் உரிமத்தை மைக்ரோசாஃப்ட் வாங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சில வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று கூறியுள்ளது. 

டிக்டாக் செயலிகளுக்கு தடைவிதிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்து, இந்த டீலை முடித்து கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மொத்தம் 8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும், இந்த நிறுவனத்தில் 1,500 பேர் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.