திருப்பூர் அருகே குடிபோதையில் இருந்தவரின் சட்டை பையில் இருந்த பணத்தைத் திருடிய 17 வயது சிறுவன், மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கொழுமம் அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 4 மாதங்களாகப் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. 

தற்போது, தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்குப் பாடப் புத்தங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன், இந்த பாடப் புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், பள்ளிக்கு வந்துள்ள பாடப் புத்தகங்களைச் சரி பார்ப்பதற்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட அந்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றுள்ளார். 

அப்போது, அந்த பள்ளியின் கழிப்பிடம் அருகே ரத்த வெள்ளத்தில் ஆண் ஒருவர் சடலமாக அங்குக் கிடப்பதைப் பார்த்து, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, பள்ளியின் அருகில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ரகுபதி, அந்த பகுதியில் உள்ள குமரலிங்க் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

இது தொட்பாக அந்த பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சடலத்தை கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்த நபர் மதுரையைச் சேர்ந்த 56 
வயதான கணேசன் என்பது தெரிய வந்தது.

மேலும், கணேசன் குடிபோதையில் பள்ளி வளாக மாடியின் மேல் ஏறிய போது, அங்கிருந்து கீழே விழுந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, இறந்துபோன கணேசன் உடன், கடைசியாக அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிவா என்றது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவனைப் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். 

அப்போது, “உயிரிழந்த கணேசன், சிறுவன் சிவா ஆகிய இருவர்களும், அரசுப் பள்ளியின் மாடியில் ஏறி ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனால், கணேசன் நல்ல போதைக்குச் சென்றதும், அவரின் சட்டைப் பையில் இருந்த பணத்தை, சிறுவன் சிவா திருடி உள்ளான். 

அதன் பிறகு, கணேசனுக்குப் போதை தெளிந்தால் பணம் திருடியதற்காக நாம் மாட்டிக்கொள்வோம் என்று யோசித்த சிறுவன், பின் விளைவுகள் பற்றி சற்றும் 
யோசிக்காமல், கணேசனை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு, கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மாடியிலிருந்து கீழே விழுந்த கணேசன், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது. 

மேலும், கணேசன் உயிரிழந்ததும், பள்ளியில் உள்ள கழிவறையின் அருகில், அவரின் உடலை மறைத்து வைத்துவிட்டு, சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

இதன் தொடர்ச்சியாகச் சிறுவன் சிவாவை கைது செய்த போலீசார், சிறுவன் மீது கொலை வழக்கு மற்றும் கொலையை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை வழக்கில் கடந்த 2 நாட்களாக போலீசார் துப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் சிறுவன் ஒருவன் சம்மந்தப்பட்டதை கண்டுபிடித்து, வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதனிடையே, சட்டைப் பையில் உள்ள சொற்ப ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு, பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் குடிபோதையில், கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.