கோவையில் காதலிப்பதாகக் கூறி 9 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த தாஸ், அப்பகுதியில் சுவற்றில் வர்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலையின்றி, வீட்டில் சும்மா இருந்து வந்துள்ளார். அத்துடன், நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதும், செல்போனில் நேரத்தை போக்குவதுமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது, தாஸ்க்கு ஒரு கண் இருந்துள்ளது. தற்போது வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் சும்மாவே இருந்து வருவதால், இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அந்த மாணவியை எப்படியும் தன் வலைக்குள் வீழ்த்தி விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, அந்த மாணவியும் தற்போது ஊரடங்கு காரணமாக, வீட்டிற்கு வெளியே வந்து சிறிது நேரம் விளையாடுவதும், பிறகு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருப்பதுமாக இருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த சிறுமியிடம் தாஸ் பழகத் தொடங்கி உள்ளார். அத்துடன், அந்த 9 ஆம் வகுப்பு மாணவியிடம், “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஆசை வார்த்தைகளாகக் கூறி, அந்த சிறுமியின் மனதை மாற்றிப் பழகி வந்ததாகவும் தெரிகிறது.

இப்படி, காதலை வெளிப்படுத்திய அடுத்த சில நாட்களிலேயே, அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிறுமியிடம் சென்று, “உன் அண்ணன் உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று பொய் சொல்லி, அந்த மாணவியை, அருகில் இருந்த ரயில்வே டிராக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு, சென்றதும், அந்த இடம் மற்றும் இருட்டைப் பார்த்த சிறுமி சற்று பயந்துள்ளார். மேலும், “என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிடுங்கள்” என்றும் கூறி உள்ளார். ஆனால், அந்த ரயில்வே டிராக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இருட்டு பகுதியில், அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தாஸ் ஈடுபட்டுள்ளார். இதனால், பயந்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு, அங்கிருந்து தப்பி உள்ளார்.

அங்கிருந்து தப்பித்த சிறுமி, அந்த இரவு நேரத்தில் வீட்டிற்கு வர பயந்துபோய், அந்த பகுதியில் இருந்த ஒரு கோயிலிலேயே இரவு முழுவதும் தங்கி உள்ளார்.

அதே நேரத்தில், தன் மகளைக் காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர், அந்த ஊர் முழுவதும் தேடி உள்ளனர். நள்ளிரவு வரை எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், நள்ளிரவு நேரத்தில், அங்குள்ள பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் “தங்கள் மகளைக் காணவில்லை” என்று புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, அதிகாலை நேரத்தில், சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமி வீட்டிற்கு வந்ததும், அவரது பெற்றோர் “என்ன ஆச்சு?” என்று விசாரித்துள்ளனர். 
அப்போது, “பக்கத்து வீட்டு தாஸ், ஏமாற்றிக் கூட்டிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதையும், இதனால் அங்கிருந்து தப்பித்து கோயிலில் தஞ்சம் 
அடைந்ததையும்” கூறி சிறுமி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.