கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 

அதேபோல் தமிழகத்தில், ஊரடங்கு காலகட்டத்தில் மின் ஊழியர்களால் மின்கட்டண மதிப்பீடு செய்ய வர முடியாத காரணத்தினால் நான்கு மாதத்துக்குச் சேர்த்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின்கட்டணத்தை மின்சார ஊழியர்கள் மொத்தமாகக் கணக்கிட்டனர் என்றும், இதனால் வழக்கமாக வரும் கட்டணத்தைவிட கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலையில் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், இரண்டு மாதங்களாகப் பிரித்து மின்சார பயன்பாட்டைக் கணக்கிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மின்கட்டண ரீடிங் குளறுபடிகளைக் கண்டித்தும், கட்டணத்தை எளிய மாத தவணைகளில் கட்ட அனுமதிக்கக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இதற்காக திமுக சார்பில் தமிழகம் எங்கும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “மின்கட்டணம் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வசூலிக்கும் முறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலிருந்த காரணத்தினால் கட்டணம் அதிகம் வந்துள்ளது. மாதம் ஒருமுறை வசூலிப்பது உள்ளிட்டவை தொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசனை நடத்தப்படும்”என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்டது பற்றியும் பேசிய அமைச்சர், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்துள்ளேன். கொரோனா ஆரம்பக்கட்ட அறிகுறி அறிந்தவுடன் சிகிச்சை மேற்கொண்டால் உயிரைப் பாதுகாக்கலாம் என்பதற்கு நான் ஓர் உதாரணம். எனவே, மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.