டிஜிட்டல் கணக்குகள் மீதான பாதுகாப்பின்மை, ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில்கூட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே, பிரபலங்களான கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி கிம் கர்தாஷியன் வெஸ்ட் உள்ளிட்ட உலகின் முக்கிய புள்ளிகள் பலரின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்து முடக்கியுள்ளது. இதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் ஹேக் செய்திருக்கிறார்கள் ஹேக்கர்கள்.

இதைத்தொடர்ந்து உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்களின்  தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுயிருப்பது, பொது மக்களிடம் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த ஹேக்கிங் குற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் யாரென விசாரித்தததில், மூன்று இளைஞர்கள் சிக்கியிருந்தர்கள். அவர்களில், புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளாதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹேக் செய்தவர்கள் கண்டறியபப்ட்டதால், மோசடிக்கு பின்னிருக்கும் காரணம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களை தொடர்ந்து, தற்போது இந்த ஹேக்கிங் சம்பவங்கள், செய்தி நிறுவனங்களையும் உலகளவில் குறிவைத்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வாக, பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த டவ்ன் என்ற சேனலை ஹேக் செய்திருக்கிறார்கள் சிலர். ஹேக் செய்து, சேனலில் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் காணொலியும், உடன் ”இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்” என்கிற வார்த்தையும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. செய்தி சேனலில் வெளியான அந்த இந்தியக் கொடியின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நிகழ்வுகள் யாவும், இன்று மாலை 3.30 மணி அளவில் சிறிது நேரம் ஒளிபரப்பாகியுள்ளது. அதைப் பார்த்து பல மக்கள் அதிர்ச்சி அடைந்து அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடத்தொடங்கி இருக்கிறார்கள். தற்போதைக்கு இந்த வீடியோ, இந்திய சமூகவலைதளங்களில்தான் அதிகமாக பதிவாகிவருகின்றது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பவம் குறித்து டவ்ன் செய்தி நிறுவனம், உருது மொழியில் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில், இந்த சம்பவம் சேனலை யாரோ ஹேக் செய்ததால் ஏற்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதை செய்தவர்கள் யாரென கண்டறிய உடனடி விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாகதாகவும், விசாரணைக்கு பிறகு பார்வையாளர்களுக்கு முழுமையான உண்மை தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய ஹக்கேர்கள் பாகிஸ்தான் நாட்டின் டவ்ன் நியூஸ் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடியை ஒளிபரப்பியதாக இந்திய ட்விட்டர் வாசிகள் சிலர் பதிவிடத் துவங்கியுள்ளனர். விரைவில் முழு விவரங்கள் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.