இயற்கையை விட மனிதர்கள் மேலானவர்கள் என்ற மாயையை கொரோனா தகர்த்துள்ளது : குடியரசுத் தலைவர்

இயற்கையை விட மனிதர்கள் மேலானவர்கள் என்ற மாயையை கொரோனா தகர்த்துள்ளது : குடியரசுத் தலைவர் - Daily news

பிரதமர் மோடி நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வழக்கமாக லட்சக்கணக்கிலான மக்கள் திரண்டு பங்கு பெறும் இந்நிகழ்வில் கொரோனா ஊரடங்கு காரணமாக 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் உறையாற்றியதில், உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை சந்தித்து வருகிறோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை சமாளிக்க பெரும் முயற்சி தேவை. நாம் இந்த சவாலை முன்கூட்டியே எதிர்பார்த்ததுடன், உரிய நேரத்தில் நடவடிக்கைகளை எடுத்தோம். கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் முன்கள பணியாளர்களை நான் பாராட்டுகிறேன். டாக்டர்கள், நர்சுகள், இதர சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது. அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நமது நாட்டின் கதாநாயகர்களாகக் கருதப்பட வேண்டும். மாநில அரசுகளும் உள்ளூர் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுத்தன. இதனால் பாதிப்பு பெருமளவு தடுக்கப்பட்டு, உயிரிழப்பு குறைக்கப்பட்டது. இதை உலகமே பின்பற்ற வேண்டும் என்ற முன்மாதிரியை நாம் உருவாக்கியுள்ளோம்.

கொரோனாவில் இருந்து உலகம் கடுமையான பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது. இயற்கையை விட மனிதர்கள் மேலானவர்கள் என்ற மாயையை இந்த கொரோனா தகர்த்துள்ளது. இதை உணர்ந்து, நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். இயற்கைக்கு முன்பு நாம் அனைவரும் சமமானவர்கள், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற பாடங்களை கொரோனா நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ திட்டம், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி உள்ளது. நமது பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. கொரோனா பரவல் நேரத்தில் சுதந்திர தினத்தை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில், நமது அண்டை நாட்டில் உள்ள சிலர், எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எல்லையை பாதுகாக்கும் முயற்சியில் உயிரிழந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன். நாட்டின் பெருமைக்காக அந்த பாரத மாதாவின் புதல்வர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது.

இந்தியாவின் தன்னம்பிக்கை என்றால் உலகத்திலிருந்து அந்நியப்படுத்தாமலோ அல்லது தூரத்தை உருவாக்காமலோ தன்னிறைவு பெறுவது" என்று  குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment