இங்கிலாந்து பிரதமரின் காதலியால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பிரதமரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்து வருகிறார். இவர், சமீபத்தில் கொரோனா என்னும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் தேறி தனது மக்கள் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்.

இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் கேரி அணி என்ற ஒன்றும், டொமினிக் கம்மிங்ஸ் அணி என்ற ஒன்றும் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கேரி பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலி ஆவார். டொமினிக் கம்மிங்ஸ் என்பவர், பிரதமரின் ஆலோசகர் ஆவர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருந்து வந்த டொமினிக் கம்மிங்ஸிவர் அணியைச் சேர்ந்த லீ கெயின் என்பவருக்கு, இந்த வாரம் பெரிய பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அந்த பதவி உயர்வையும் மீறி, அவர் திடீரென ராஜினாமா செய்து இருக்கிறார். 

பிரதமரின் முக்கிய உதவியாளர் ராஜினாமாவிற்கு காரணமாக, “பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலி கேரியின் எச்சரிக்கையையும் மீறியே, லீ கெயினை, பிரதமரின் ஆலோசகரான டொமினிக், பதவியில் அமர்த்தினார்” என்பது தெரிய வந்திருக்கிறது.

பிரதமரின் ஆலோசகரான டொமினிக்கின் இந்த செயல், பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலி கேரிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாக, பிரதமர் வீட்டுல் பெரும் பனிப்போர் ஒன்று நீண்ட நாட்களாக நடந்துகொண்டே இருந்ததும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், “பிரதமரின் ஆலோசகர்களால், பிரதமருக்குச் சரியான ஆலோசனை அளிக்கப்படவில்லை” என்று, தொடர்ச்சியாகக் குறை கூறி வந்தார் காதலி கேரி.

அத்துடன், ஊடக செயலரான அலெக்ரா ஸ்ட்ராட்டன் என்பவருக்கும், மூத்த உதவியாளரான முனிரா மிர்ஸா என்பவருக்கும் லீ கெயினை பதவியில் அமர்த்தியது பிடிக்கவில்லை என்றும், கூறப்படுகிறது. இது தொடர்பாகவும், பிரதமர் இல்லத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அலெக்ரா ஸ்ட்ராட்டன் என்பவர், “நான் லீ கெயினிடம் வேலை செய்ய முடியாது என்றும், எதுவாக இருந்தாலும் நான் நேரடியாக பிரதமரிடம் தான் பேசுவேன் என்றும், அதற்கு சம்மதித்தால் மட்டுமே நான் இங்கு வேலை செய்வேன்” என்றும் போர்கொடி தூக்கி இருக்கிறார். அதன் படியே, அவர் விருப்பம் போல் பணி செய்ய அவர் அனுமதித்துள்ளார் கேரி.

ஆனால், “இது என்னை அவமதிக்கும் செயல்” என்பது போல் உணர்ந்து உள்ளார் லீ கெயின். ஆனால், லீ கெயினால், பிரதமரின் காதலியை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர், “இனியும் பிரதமரின் காதலியுடன் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு நிம்மதியை இழக்க முடியாது” என்று முடிவு செய்து, லீ கெயின் “தனது பதவியை ராஜினாமா செய்வதாக” அறிவித்து விட்டார். 

மேலும், லீ கெயினை தொடர்ந்து பிரதமரின் ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ் என்பவரும், பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதனை அவர் தற்போது மறுத்து உள்ளார். இதனால், இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதே நேரத்தில், இங்கிலாந்து பிரதமரின் காதலியால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பிரதமரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்நாட்டு மக்கள் பலரும் பிரதமரின் காதலிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விசயத்தை, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.