வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கவில்லை என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் காரை வழிமறித்து கேள்வி எழுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 15 நிமிடங்கள் அந்த இளைஞர் சாலையில் அஜய் தேவ்கனின் காரை வழிமறித்து, விரல் நீட்டி கேள்வி கணைகளை தொடுத்தார்.

மும்பை கோரோகாவ் பிலிம் சிட்டிக்கு நேற்று காலை 10.30 மணியளவில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரில் வந்தார். அப்போது அவரது காரை வாலிபர் ஒருவர் திடீரென வழிமறித்தார். நீங்கள் ஏன் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக நடிகரின் மெய்க்காப்பாளர் பிரதீப் கவுதம் தின்தோஷி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் ராஜ்தீப் சிங் என்றும், மும்பை வடக்கு புறநகர் சந்தோஷ் நகரில் வசித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பஞ்சாபை சேர்ந்த இவர் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

ரிஹானாவுக்கு எதிராக உடனடியாக கொந்தளித்து ட்வீட் போட்ட நீங்கள், அதன் பிறகு இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்காக என்ன செஞ்சீங்க, வேளான் சட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை ஏன் என விரலை நீட்டி மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கன், பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள மைதான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆலியா பட்டின் கங்குபாய் காத்தியாவதி மற்றும் அக்‌ஷய் குமாரின் சூர்யவன்ஷி உள்ளிட்ட படங்களிலும் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.