பெண்கள் குறித்து தரக்குறைவாக எழுதியுள்ள மனு தர்மம் நூலை எரிக்கும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “ 'மனுதர்மம்' என்ற நூலில் பட்டியலின சமூகத்தினரை மிக தரக்குறைவாக மோசமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக” தெரிவித்திருந்தார். 

அதாவது, “இந்து பெண்கள் விபச்சாரிகள் என இந்து மத சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதாக” திருமாவளவன் பேசியிருந்தார். 

திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன், “இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும், இந்து சாஸ்திரங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பரப்பி வரும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், திருமாவளவன் மீது, “கலகம் செய்தல், உணர்வுகளைத் தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சித்தல், இரண்டு மதத்தினரிடையே கலவரத்தை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல்” உள்ளிட்ட 6 பிரிவுகளின் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதே போல் ஆவடி, கோடம்பாக்கம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களிலும் திருமாவளவன் மீது, பாஜக வினரால் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, அவரை தனிப்பட்ட முறையில் மிக மோசமான அளவுக்கு பாஜகவினர் மிக கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விசிக கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் மனு அளித்தார். அப்போது, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, “திருமாவளவன் பேச்சு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் என்பவர், விசிக தலைவரைத் தனிப்பட்ட முறையில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

“மாநில பாஜக தலைவர் முருகன், எச்.ராஜா போன்றோரின் தூண்டுதல் காரணமாகத் தான் இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களை கல்யாணராமன் தொடர்ந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாக” தெரிவித்தார். 

இதன் காரணமாக, “இந்த அவதூறு பரப்பும் குற்றப் பின்னணியில் இருக்கும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும்” கூறினார்.

மேலும், “மனு தர்மம் என்ற நூலில் பட்டியலின மக்களைக் குறித்து மிக மோசமாக குறிப்பிட்டுள்ளதாகவும், அந்த நூலைத் தடை செய்யாமல் திருமாவளவனை விமர்சிப்பது தரக்குறைவான செயல்” என்றும், அவர் கண்டனம் தெரிவித்தார். 

“மனு தர்மம் என்ற நூலை வரும் நாட்களில் எரித்து போராட்டம் நடத்த உள்ளதாக” அவருடன் வந்திருந்த சமூக செயற்பாட்டாளரும், பேராசிரியருமான சுந்தரவல்லி தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, “பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நடிகை குஷ்பு நேற்று வலியுறுத்திய நிலையில், “பெண்களை இழிவாக பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, சசிகலா புஷ்பாவும் வலியுறுத்தி உள்ளார்.