டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தமிழில் புதிதாக 4 தொடர்களை இணையத்தில் வெளியிடவுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெளியீடு குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி ஆரம்பமாகியுள்ளது. அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாஸ்டார், ஜீ5 ஆகிய தளங்கள் இதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன

தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் கார்த்திக் சுப்பராஜ், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து 4 புதிய வெப் சீரிஸை அறிவித்துள்ளது.

லைவ் டெலிகாஸ்ட் என்கிற திகில் வெப் சீரிஸை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். பேய் இருக்கும் வீட்டுக்குள் நுழையும் திரைப்படக் குழுவினர் என்ன அனுபவங்களை சந்திக்கின்றனர் என்பதைப் பற்றிய தொடர் இது. தற்போது இந்த வெப்சீரிஸின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்கிற தொடரில் நடிகர் சத்யராஜ், நடிகை சீதா ஆகியோர் நடிக்கின்றனர். குடும்பம் சார்ந்த கதையான இதில், தற்போது பிக்பாஸில் போட்டியாளராக இருக்கும் ஆஜித்தும் நடித்திருக்கிறார்.

ட்ரிபிள்ஸ் என்கிற நகைச்சுவை கலந்த காதல் தொடரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

நடிகை தமன்னா பிரதானமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நவம்பர் ஸ்டோரி என்கிற தொடரும் வெளியாகவுள்ளது. க்ரைம் எழுத்தாளர் மற்றும் அவரது மகளைப் பற்றிய கதை இது. அமெரிக்க திகில் தொடர்களுக்கு இணையாக வன்முறை இருக்கும் இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் இந்திரா சுப்பிரமணியம் இயக்குகிறார். நடிகர் பசுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் தமன்னா, காஜல் அகர்வால், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் ஓடிடி தளங்களில் முதல்முறையாக பங்களிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், தீபாவளி அன்று நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு, காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான லக்‌ஷ்மி பாம் திரைப்படத்தை ஹாட்ஸ்டார் தளம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.