அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் ரஞ்சித். 

இவர் தயாரித்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் தயாரித்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

இந்நிலையில் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ஒன்றை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ரைட்டர் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, எடிட்டராக மணிகண்டன் சிவகுமார் ஆகியோர் பணிபுரிகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஏப்.14) வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. 

அந்தாதூன் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் பிரசாந்துடன் நடிக்கிறார் சமுத்திரக்கனி. இந்த படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இந்த படத்தை இயக்கி வருகிறார்.