2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவிகள் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அரசால் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி கலந்தாய்வின் தொடக்கமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில்(பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயணபாபு, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியபடி கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் தங்களுடைய விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

கலந்தாய்வுக்கு முன்னராக, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில்  இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு, அரசியல் தலைவர்கள் பலரும், கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அவர்களில் ஒருவராக, விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனும், கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் ``தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!"
 என்று வலியுறுத்தியும் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில்  இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம்பெற்றிருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு  மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். 

தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவைக்  கருக்கும் விதமாகவே மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க முடியாது என மறுத்துவரும் பாஜக அரசு ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களித்து  இனிசெட் என்று தனியே அவற்றுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும். 

பாஜக அரசின் துரோகம் போதாதென்று இப்போது வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தரவரிசைப் பட்டியலில் தெலுங்கானா ரேங்க் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 34 பேர் இடம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. வெளி மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய எம்பிபிஎஸ் இடங்களைப் பிற மாநில மாணவர்களுக்கு ஏன் தாரை வார்த்துத் தரவேண்டும்? ஏற்கனவே மத்திய தொகுப்புக்கு 15% இடங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு மிச்சமிருப்பதிலும் பிற மாநில மாணவர்களைச் சேர அனுமதிப்பது நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வஞ்சகம் செய்வதாகாதா? 

மருத்துவப் படிப்பு சேர்க்கையில்  எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடக்காமல் தடுப்பதற்கு குடியிருப்புச் சான்றிதழ் கேட்பது மட்டுமின்றி,  6 ஆம்  வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை தமிழ் நாட்டில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் எனத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" 

என குறிப்பிட்டுள்ளார்.