மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள   3 வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக்கோரி நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து விவசாயிகள் தொடர்ச்சியாக 70 நாட்களுக்கு மேலாகத் தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டாமல் தோல்வியடைந்தது.

இதற்கு மத்தியில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில், விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி 1 லட்சம் டிராக்டர்கள் கலந்துக்கொள்ளும்  பேரணியை  நடத்தினர். இந்தப் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால்  காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் அதிக  காயம் ஏற்பட்டது. விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர்  கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லைப்பகுதியில் வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழையாதவாறும், உள்ளேயிருந்து வெளியே செல்ல முடியாதவாறும் பல தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர். இதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு உலகம் முழுவதில் இருந்தும் பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க பாடகி ரிஷான்னா, சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா என பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இவர்களின் கருத்திற்கு நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே,விராட் கோலி, கவுதம் கம்பீர் என பல முக்கிய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்குத் தமிழக திரைக்கலைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.நடிகர்  மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்வது  தற்கொலைக்குச் சமம். உரிமைகளுக்காகப் போராடுவதும் ஜனநாயகம் தான். அவர்களை ஏர்முனை கடவுள் என்று அழைத்தால் மட்டுமே நம்மைப் படைத்தவன் மகிழ்வான் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் சித்தார்த் உங்களுடைய கதாநாயகர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள் அல்லது நீங்கள் வைத்திருக்கும் அபிமானத்திலிருந்து அவர்கள் வீழ்வதைப் பார்ப்பீர்கள் என காட்டமாக டுவீட் செய்துள்ளார்.இயக்குநர் லெனின் பாரதி, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனாலும், இறையாண்மையைக் காக்க களமிறங்கி இருக்கும் உள்ளூர் ஆட்டக்காரர்கள் வாழ்க வாழ்க என பதிவிட்டுள்ளார்.

நான் ஒரு இந்தியன். அதனால் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.இயக்குநர் நவீன், நாம் விவசாயிகளுடன் நிற்க வேண்டும். இந்த நாடும் ஒற்றுமையாக விவசாயிகளுடன் நிற்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன்,குரலற்றவர்களின் குரல்களைக் கேட்கச்செய்வதற்கான ஒரே வழி போராட்டம். இந்த தேசத்தின் ஆன்மாவை காப்பவர் விவசாயிகள்,அவர்களின் உரிமைக்காகப் போராடுவதும் அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து பல தரப்பில் இருந்தும், பல நாடுகளில் இருப்பவர்களும் அவர்களது ஆதரவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

 

லெனின்.