ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகள்  அனைத்தையும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

தமிழக மக்களும், இளைஞர்களும் 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மறக்கவே மாட்டார்கள். சுதந்திரப் போராட்டம், இந்தி திணிப்பு போராட்டம் எப்படி இருந்தது என்பதை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக அமைந்தது ஜல்லிக்கட்டுப் போராட்டம்.
தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி கலந்தது ஜல்லிக்கட்டு. பொங்கல் திருவிழாவின் போது அலங்காநல்லூர்,வாடிவாசல் முதல் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். சங்க இலக்கியங்களிலும்,ஆண்களின்  வீரவிளையாட்டுகளில் ஒன்றாகவும் ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தக்கூடாது  என உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை மெரினாவில் சிறிய எண்ணிக்கையில் துவங்கிய போராட்டம், தமிழகம் முழுவதும் பரவியது. எந்த ஒரு அரசியல் கட்சி சாராமலும் இளைஞர்கள் ஒன்று இணைந்து போராட்டம் நடத்தியது வரலாற்றில் பதியப்பட்டது.
சென்னை மெரினா இளைஞர்களின் கடலாகவே காட்சி தந்தது. மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடினார். திரைக்கலைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
' வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம்’ என்ற முழக்கம் தமிழகம் எங்கும் ஒலித்தது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த அதிமுக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றியது.

அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் திடீரென தாக்குதல் நடத்தியதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சென்னையில் இளைஞர்கள் சிலர் கடலுக்குள் நின்றபடி மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. சாலையிலிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டது.


இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சட்ட வல்லுநர்கள் ஆலோசனையுடன் திரும்பப்பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


அதேபோல் இன்றையக்கூட்டத்தில்  விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனும் தள்ளுபடிசெய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.