தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார். 

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த டீசரை ஹாலிவுட் படமான டெனென்டின் காப்பி என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த விமர்சனத்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.

மாநாடு படத்தின் டீஸரை டெனெட் படத்தோடு சிலர் ஒப்பிடுவது எங்களுக்குக் கவுரவம் தான். எனினும் துரதிர்ஷ்டவசமாக இதற்கும் அதற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு 'டெனெட்' படம் புரியவே இல்லை. ட்ரெய்லருக்குக் காத்திருங்கள். அப்போது நீங்கள் அதை வேறொரு படத்துடன் ஒப்பிடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. படத்தில் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.