அனைத்து கல்லூரிகளும் பிப். 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில் வாரத்தில் 6 நாட்களும்  கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.இதனால் மாணவர்களின் கல்வி பெரிதாகப் பாதிக்கப்பட்டது. கொரோனா தாக்கமும் அதிகமாக இருந்ததால் 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.

இதேபோல் கல்லூரி மாணவர்களும் தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் இவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதால், அரியர் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி விளம்பரங்களும் செய்தனர். மேலும் அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி அறிவித்தது செல்லாது என்ற கருத்தும் எழுந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்ததை தொடர்ந்து, கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையும் இணையம் மூலம் நடைபெற்றது. பின்னர் மாணவர் சேர்க்கை முடிந்து மாணவர்களுக்கான பாடங்களும் ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட்டது.இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்த தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கும் தளர்வுகளை அறிவித்தது. கல்லூரிகள் மூடப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு 2020 டிசம்பர் 7 ஆம் தேதி  இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணார்களுக்காக 8ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.மேலும் அனைத்து கல்லூரிகளும் வரும் 8ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.8 ஆம்  தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.அதில் அனைத்து கல்லூரிகளும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிக்கு செல்வதை நினைத்து மாணவர்கள் கவலைப்படுவதாக கூறப்படுகிறது.

 

லெனின்