டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அஜய் ஞானமுத்து. பின்பு அதர்வா, நயன்தாரா அனுராக் கஷ்யப் வைத்து இமைக்கா நொடிகள் என்கிற படத்தை இயக்கி அசத்தினார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அவரது பிறந்தநாளை முன்னிட்டு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்தது. அந்த கொண்டாட்டம் நிறைந்த புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அஜய் ஞானமுத்து. இதில் ரோபோ ஷங்கர், ஆனந்தராஜ், தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சியான் ரசிகர்கள். 

கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி பிலே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அப்யங்கர் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இணைந்து எழுதியுள்ளனர். 

படத்தில் முக்கிய ரோலில் நடித்த இர்ஃபான் பதான், கொல்கத்தா படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்தார். இன்டர்போல் அதிகாரியாக நடித்திருக்கும் பதான், தனது கேரக்டர் பற்றியும் பதிவு செய்திருந்தார். கொரோனா வைரஸின் பாதிப்பு நீங்கி இயல்பு நிலை திரும்பியவுடன், படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 

இப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்தனர். பொதுவாகவே உச்ச நட்சத்திரங்களின் திரைப்படம் திரையரங்கில் வெளியானால் தான் திருவிழாவாக மாறும். இதை உறுதி செய்யும் வகையில் சியான் விக்ரம் ரசிகர்கள் கோப்ரா படத்தின் தியேட்டர் செலிபிரேஷன் போன்று எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்திருந்தார் இயக்குனர். 

தற்சமயம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம், அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.