சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் என்று அவரை நினைவுகூர்ந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமன்றி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெஞ்சமின் ,வளர்மதி, தேனி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இவர்களில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, ``சிவாஜி கணேசன் ஒரு வரலாறு. பல கதாபாத்திரங்களை நம் கண்முன் நிறுத்தியவர் அவர்" என்று புகழாரம் சூட்டினார். மேலும் சினிமாவில் சிந்துநதியின் இசை நிலவினிலே என்று பாடும் போது பாரதியாராகவும், செக்கிழுத்த செம்மல் வஉ சிதம்பரமாகவும், வீர பாண்டிய கட்டபொம்மனாகவும் வாழ்ந்து காட்டியவர் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார். 

பின்னர் அவரிடம் முதல்வர் வேட்பாளர் பற்றியும், ஓபிஎஸ் ஆலோசனை நடத்துவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``ஓபிஎஸ் மாற்றுக் கட்சியினரை அழைத்து பேசவில்லை,தன் சொந்த கட்சியினருடன் தான் பேசினார் அதில் தவறில்லை" என்று கூறினார். மேலும் பேசியவர், ``அக்டோபர் 7ல் அறிவிப்பு செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம். வெளியில் வந்து கருத்து சொல்லக்கூடாது. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பு வரும். அதுவரை அனைவரும் பொறுமையோடு இருக்க வேண்டும். வேற்றுமையால் தீமை திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் சட்ட திட்டங்கள் தெரியும். அதனை உணர்ந்து அதற்கு தகுந்த முறையில் பேசவேண்டும். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே; வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமை" என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனும், பின்னர் பிற்பகலில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய ஆலோசனை கூட்டங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.

அந்த நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவுக்கான அழைப்பிதழில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சென்னை திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம்பெறவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரிடம் நேற்றய தினம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ``பிராதான நிகழ்ச்சிகளில் மட்டும் தான் துணை முதல்வர் பெயர் இருக்கும். இது சென்னை மண்டலத்தில் நடக்கும் நிகழ்ச்சித்தான். அதனால் எந்த உள் நோக்கம் இல்லை. மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டத்தில் துணை முதல்வர் பங்குபெறாமல் தன் ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியது ஏன் என்ற கேள்விக்கு, செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அவர் கட்சி வேலைகளை செய்து இருக்கிறார். எனவே அவர் வரவில்லை. 7ஆம் தேதிக்குள் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, தலைமைக் கழகம் எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் நான் பதில் சொலமுடியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று தெரிவித்திருந்தார் அவர்.