உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு, நேற்று அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுலை போலீசார் சட்டையைப் பிடித்து தள்ளியதால், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

ஹத்ராஸ் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு 144 தடையுரத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதையடுத்து நேற்று சென்று இருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தியிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதற்கு காங்கிரசார் நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று ஹத்ராஸ் சென்று கொண்டு இருந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 200 கி. மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்த எம்பி தெரிக் ஓ பிரைனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் பிரைன் கீழே விழுந்தார். இவருடன் எம்பிக்கள் ககோலி கோஷ் தஸ்திதர், பிரதிமா மண்டல், மம்தா தாகூர் ஆகியோர் சென்று இருந்தனர்.

இவர்கள் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நாங்கள் தனித்தனியாக சென்று ஆறுதல் கூற இருந்தோம். ஆனால் எங்களை ஏன் தடுத்தனர் என்று தெரியவில்லை. மிருகத்தனமான ராஜ்ஜியம் நடத்துகின்றனர். இன்னும் நாங்கள் 1.5 கி. மீட்டர் சென்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்கே சென்று விடுவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி போலீஸாரால் கீழே தள்ளப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ''ராகுல் காந்தியின் பொறுப்புக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட உத்தரப்பிரதேச அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராடும் தலைவர்களையும், மக்களையும் தாக்கியதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய தண்டனையை அனுபவிப்பார். பாஜகவின் இந்த அராஜகப் போக்கிற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்'' என்றார்.

முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான தேவகவுடா கூறுகையில், ''உத்தரப் பிரதேச அரசு, பெரும் அரசியல் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் நடத்தி இருக்க வேண்டும். அவர்கள் நியாயமான கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். போராட்டம் நடத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை. எனவே ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போலீஸார் ராகுல் காந்தியை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தி டிவிட்டரில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்... யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.