அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கும், தனது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ட்ரம்ப் பிரச்சாரப் பணிகளில் பிசியாக இருந்தார். மேலும், அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. அப்படியான சூழலில்தான், ட்ரம்பிற்கு மிக நெருக்கமான உதவியாளரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. இவரும் அதிபர் ட்ரம்பும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று விமானத்தில் ஒன்றாக பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, ட்ரம்ப் உடனடியாக தான் தனித்திருக்க தயாராவதாக அறிவித்தார். தொடர்ந்து, சில மணி நேரத்தில் அதிபர் ட்ரம்பும், அவரது மனைவில் மெலனியாவும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
 
அப்போதுதான் அவருக்கும், அவர் மனைவி மெலனிவாக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று ஃப்ளோரிடாவில் நடைபெறவிருந்த பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு கொரோனா உறுதியானது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பணிகளை உடனடியாக தொடங்க இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இதில் இருந்து மீளுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல தன் உதவியாளருக்கு தொற்று உறுதியானது பற்றி குறிப்பிடும்போது,``சிறிய இடைவெளி ஓய்வு கூட எடுத்துக்கொள்ளாமல் அயராமல் உழைத்து வந்த தனது ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது, பலருக்கும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. மிக உயரிய பொறுப்பில், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருக்கும் அதிபருக்கே, தொற்று ஏற்படுகிறது என்றால், நாமெல்லாம் எப்படி இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போகிறோம் என்பதே, சாமாணியர்களின் கவலையாக உள்ளது.

இன்றைய தேதிக்கு, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான். அதேபோல கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட நாடும், அமெரிக்காதான். அமெரிக்காவில், சமீபத்திய கணக்குப்படி 7,494,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,12,660 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில், இந்தியா இருக்கின்றது.

அமெரிக்காவில், 2 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள் நிகழ, கொரோனா மீதான அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் அலட்சிய போக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா தொடங்கிய நாள் முதலேவும், ட்ரம்ப் அதை சீரியஸான பிரச்னையாக அனுகவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. சொல்லப்போனால், கொரோனா பரவத்தொடங்கி ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்கு ட்ரம்ப் இதை சீனா வைரஸ் என்றே குறிப்பிடுவார். அப்படியொரு முறை குறிப்பிடும்போது, ``ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 70,000 பேர் சாதாரண சளி காய்ச்சலால் இறக்கிறார்கள். இந்த சீனா வைரஸூம் அப்படியொரு நோய்தான். இதை பெரிது படுத்த வேண்டாம்" என்கிற தொணியில் ட்விட்டரில் பதிவொன்று இட்டிருந்தார் ட்ரம்ப். ஆக, ட்ரம்ப்பை பொறுத்தவரை, இந்த கொரோனா வைரஸ், சீனா - அமெரிக்காவுக்கு இடையிலான ஒரு போர்தானே தவிர, இதையொரு வியாதியென்றோ நோயென்றோ அவர் அனுகவில்லை. அதன் விளைவாகத்தான், 2 லட்சம் உயிர்களை இன்று அமெரிக்கா இழந்துள்ளது என அமெரிக்க பத்திரிகைகள் ட்ரம்ப்பை காரசாரமாக விமர்சித்தன.

யார் என்ன சொன்னாலும், ட்ரம்ப் தன் கோட்பாட்டை விடவே இல்லை. கொரோனாவை நோயாக அனுகவில்லை என்பதாலேயே, ட்ரம்ப் தானும் சில சுய கட்டுப்பாடுகளை மேற்கொள்ளமாலேயே இருந்தார். ஆம், ஜனவரி மாதம் முதல் பரவிவரும் கொரோனாவுக்கு, ட்ரம்ப் மாஸ்க் அணிந்தது ஜூலையில்தான். அப்போதும், விமர்சனங்களை நிறுத்தவே அவர் மாஸ்க் அணிந்ததாக சொல்லப்பட்டது.

கொரோனா மீது இருந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடாக, ட்ரம்ப் நிறைய தவறான தகவல்களையும் பொது வெளிகளில் பரப்பி வந்தார். உதாரணத்துக்கு, சானிடைசர் மூலம் கொரோனா அழிந்துவிடும் என்றால், எல்லோரும் சானிடைசரை குடித்துவிட்டால் என்ன என்றெல்லாம் கேட்டார் ட்ரம்ப். அதேபோல வெப்பத்தில் கொரோனா அழிந்துவிடும் என்றால், உடலுக்குள் செலுத்த முடியாதா என்றெல்லாம் கேட்டார் ட்ரம்ப். மருத்துவர்களும், நிபுணர்களும் இதையெல்லாம் கேட்டு கொதித்தெழுந்த பின், உலக சுகாதார நிறுவனம் பிரச்னையில் தலையிட்டு, தலைவர்கள் கவனமாக பேசுங்கள் என சொன்னது. ட்ரம்ப்பும், தான் விளையாட்டாகவே அவற்றை சொன்னதாக பின் வந்த நாள்களில் கூறினார். 

இதற்கிடையால், உலக அளவில் கொரோனா பற்றிய தவறான தகவல்களை அதிகம் வெளியிட்ட நபராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா பற்றிய கட்டுரைகளை 38 மில்லியன் ஆங்கிலக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர். அதில், கொரோனா குறித்து உலகிலேயே அதிக தவறான செய்திகளை அளித்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒட்டுமொத்த தவறான செய்திகளில் அதிகபட்சமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 38 சதவீத தவறான தகவல்களை அளித்துள்ளார்.

இதனை இன்போடெமிக் (infodemic) என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இது குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியரான சாரா இவானேகா கூறுகையில், ‛உலகிலேயே கொரோனா தொடர்பான தவறான தகவல்களை அதிகம் அளித்த ஒற்றை மனிதராக அமெரிக்க அதிபர் இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

சில மாதஙக்ளுக்கு முன், உலகளாவிய இந்த நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ். அவர் இதுபற்றி மேலும் பேசும்போது நோய் குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருவதையும், இந்தத் தகவல்கள் வைரஸை விடவும் வேகமாகப் பரவுவதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். தவறான தகவல்களைப் பரப்புவதை, ஆங்கிலத்தில் இன்ஃபோடெமிக் என்றும், இது தொடரும்போது மிகவும் ஆபத்தான விஷயமாக மாறிவிடும் என்றும் கூறுகின்றனர் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள்.

இன்ஃபோடெமிக் என்பது, `தீர்வுகளைச் சிக்கலாக்கும் அளவுக்கதிகமான தகவல்' எனப் பொருள்படும். எந்தவொரு நோய்குறித்தும், அளவுக்கதிகமான தகவல்கள் பரப்பப்பட்டால், மக்களுக்கு நோய்குறித்த குழப்பம் அதிகரித்துவிடும் அபாயம் உள்ளது. அந்தக் குழப்பம் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுசெல்லும் ஆபத்தும் உள்ளது. அந்தத் தவறான பாதை, நோய் பாதிப்பை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடிவிடும்.

ட்ரம்ப்பின் அடுக்கடுக்கான தவறான தகவல்களைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அந்தோனி, தனது ட்விட்டர் பதிவில் ``நம்முடைய பொதுவான எதிரி, வைரஸ்தான் என்றபோதிலும், அந்தப் பட்டியலில் 'பரப்பப்படும் தவறான தகவல்கள்' என்பதையும் இனி நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த கோவிட் - 19 பேண்டெமிக்கில், நமக்கு இனி இரண்டு எதிரிகள் உள்ளன" எனக்கூறி வேதனை தெரிவித்திருந்தார்.

``மருத்துவ வசதிகளையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவது போலவே, அறிவியல் ரீதியான உண்மைகளை அனைவரும் அதிகம் பகிர வேண்டும். மீள்தல் குறித்த நம்பிக்கையையும் ஒற்றுமையையும் மக்கள் ஒருவருக்கொருவர் இனி விதைக்க வேண்டும்" என இதற்கான தீர்வுகளையும் அவர் சொல்லி இருந்தார்.

இருப்பினும் ட்ரம்ப்பின், சில நடவடிக்கைகள், முன்னுக்கு பின் முரணான பிரச்னைக்குரியதாக இருந்தது. இப்போதும் இருக்கின்றதும் கூட! குறிப்பாக, பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் - குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமென்பதால் அவர்களுக்கு கொரோனாவுக்கான வாய்ப்பு குறைவு போன்ற ட்ரம்ப்பின் பேச்சுகள், மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகின.

ட்ரம்ப்பின், இந்த தொடர் அலட்சியங்கள்தான், அவருக்கு தற்போது உறுதிசெய்யப்பட்டிருக்கும் தொற்றுக்கும் காரணம் என சொல்லப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் சரி, இனி வரும் நாள்களில் அவர் முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்து, தற்போது கொரோனாவால் மூழ்கியிருக்கும் அமெரிக்காவை, இனியாவது அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்! அதுவே அனைவரின் விருப்பமும்.