தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

சென்ற லாக்டவுன் முழுவதும் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்தார் சூரி.  குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என சூரி வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தது. 

கடந்த லாக்டவுனில் சூரி செய்த சிறப்பான காரியம் என்னவென்றால், மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது. வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கருப்பன் காளையுடன் கம்மாய்க்கரைக்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். அதன் பிறகு ஜிம்மில் இருந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. 

இந்நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்திருந்ததாகவும், அதனை கேட்டபோது நிலம் வாங்கி தருவதாக கூறி, மேலும் பணம் பெற்று மொத்தம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை அறிந்த ரசிகர்கள், உங்கள் நல்ல மனசுக்கு தவறாக எதுவும் நடக்காது என்று சூரிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.