ஜூன் 14 ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஜூன் 3 வது வாரம் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? என்கிற கேள்வியும், குழப்பமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பியிருந்தார். 

அதில், “ஜூன் 3 வது வாரத்தில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகளைத் துவக்க வேண்டும்” என்று, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கொரோனோ பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 3 வது வாரத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கு நேரடியாக வகுப்புகளைத் துவக்க வேண்டுமா? அல்லது ஆன்லைன் வழியில் வகுப்புகளைத் துவக்க வேண்டுமா?” என்பது குறித்து தெளிவாக அதில் குறிப்பிடப்படவில்லை என்றும், கூறப்படுகிறது.

அத்துடன், “குறிப்பிட்ட பாடப் பிரிவிற்கு பதினோராம் வகுப்பில் சேர அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், முந்தைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 கேள்விகளுக்கு விடைகளைத் தேர்ந்தெடுத்துப் பதிலளிக்கக் கூடிய வகையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அதில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும், “தனியார் பள்ளிகளில் சேர வசதியில்லாத மாணவர்கள் பெரும்பாலும், அரசு பள்ளிகளைத் தேடி வருவது வழக்கமான ஒன்று தான். இது போன்ற ஒரு சூழ்நிலையில், அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்” என்றும், கல்வியாளர்கள் கருத்து
கூறியுள்ளனர். 

“இப்படியாக, அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைத் தாண்டி, கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் அளவிற்குக் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கலாம் என்ற அரசு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில், கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வு என்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது” என்கிற கருத்தும் எழுந்துள்ளது. 

தற்போது அதன் தொடர்ச்சியாக, “ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்” என்று, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.

“மேல்நிலை வகுப்புகளுக்கு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. 

இப்படியான நிலையில் தான், கொரோனோ தாக்கம் அதிகரித்ததின் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. 

இந்த நிலையில் தான், “பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்குவது நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்குத் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும்” என்று, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “மற்ற ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை” என்றும், பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

எனினும், “11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பும், ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்” என்கிற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பும், “தமிழகத்தில் ஜூன் 3 வது வாரம் பள்ளிகள் திறக்கப்படுமா?” என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.