பிரான்ஸில் மக்கள் கூட்டத்தை நோக்கிக் கைகுலுக்கச் சென்ற அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரூனை, கூட்டத்திலிருந்த ஒரு நபர் அவரது கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் 2 வது அலை சற்று வேகம் எடுத்திருந்த நிலையில், தற்போது தான் அங்கு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டு இருக்கிறது. 

அத்துடன், கொரோனா பரவலின் போது, அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக விதிக்கப்பட்டு பல்வேறு கெடுபிடிகள் பின்பற்றப்பட்டு வந்தன.

எனினும், தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், மக்களை சந்தித்து உரையாடுவதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரான்ஸ் நாட்டில் உள்ள தென் கிழக்கு மாகாணத்திற்கு, அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 

அதன் படி, அங்குள்ள டிரோம் மாகாணத்தில் மாணவர்களுடன் உரையாடிய அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், அதன் பிறகு அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பொது மக்களின் அருகில் சென்று அதிபர் இமானுவல் மேக்ரூன் தனது கைகளைக் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். 

அப்போது, யாரும் எதிர்பாராத நிலையில், கூட்டத்திலிருந்த ஒரு நபர், அதுவும் கூட்டத்தில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவர் தனது ஒரு கையால் அதிபர் இமானுவல் மேக்ரூனின் கையை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் அதிபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து உள்ளார். அப்போது, உடனிருந்த ஒரு இளைஞர் அதிபர் இமானுவல் மேக்ரூனுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இதனால், பதறிப்போன அதிபரின் பாதுகாவலர்கள், உடனடியாக அதிபர் இமானுவேல் மேக்ரானை, அந்த நபரிடமிருந்து காப்பாற்றினார்கள்.

மேலும், அந்த இரு நபர்களையும் மடக்கிப் பிடித்த அதிபரின் பாதுகாவலர்கள், அவர்களை உடனடியாக கைது செய்தனர். இதனால், அங்கு கூடியிருந்த பொது மக்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த நபர் மீதும், அதிபருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய நபர் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் படி, “அதிபர் மீதான கோபத்திற்கு என்ன காரணம்? என்றும், வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினார்களா?” என்கிற கோணத்திலும், அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதனிடையே, பிரான்ஸ் அதிபர் மேக்ரூனை கன்னத்தில் அறைந்த வீடியோ ஒன்று, பிரான்ஸில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இச்சம்பவம், அந்நாட்டு மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.