இனி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்கும் வகையில், தனிப்பிரிவு இணையதளம் புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

“இந்தியாவில் சட்டம் எல்லாம் சாமானியனுக்குத் தான்” என்கிற ஒரு வழக்குச் சொல் நடைமுறையில் உள்ளது. இதனால், பணம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் பெரும்பாலும் எல்லாவிதமான குற்றங்களில் இருந்தும் தப்பித்துக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் ஒரு சிறுய தவறு செய்யும் சாமானியன் மிக எளிதாகத் தண்டிக்கப்படுவதாகவும் பரபலான புகார்கள் இந்தியாவில் அவ்வப்போது கூறப்படுவது உண்டு.

அத்துடன், நீதிக்காகப் போராடும் அப்பாவி மக்கள் சிலர், அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என்று, மாறி மாறி புகார்கள் அளித்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கப்படாத நிலையில், முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குக் கடைசி முயற்சியாகப் புகார் 
அளிப்பது உண்டு. 

ஆனால், தற்போது சினிமாவில் வருவது போன்று, இனி பொது மக்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்கும் வகையில், 
தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

மு.க. ஸ்டாலின், முதலமைச்சராகப் பதவி ஏற்று ஒரு மாதம் காலம் ஆகிறது. அவர் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக அவர் அறிவித்து வருகிறார்.

அதன் படி, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ், பொது மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்கும் வகையில், தனிப்பிரிவு இணையதளம்” புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப் பிரிவில், cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக, பொது மக்கள் தங்களது புகார்களை அளிக்கலாம். 

குறிப்பாக, “தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் இந்த இணைய தளம் செயல்படுகிறது. பொது மக்கள் இந்த இணையதளம் மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம்” என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது. 

அதே போல், பொது மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், அந்த இணைய தளத்தில் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக, இனி எளிய எளிய மக்கள் பயன் அடைவார்கள் என்றும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.