இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். சீரியல் கில்லர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள நெற்றிக்கண்  திரைப்படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த திகில் திரைப்படங்களில் ஒன்றான அவள் படத்தை இயக்கிய மில்லின்ட் ராவ் இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான R.D.ராஜசேகர்  நெற்றிக்கண் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அவள் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நெற்றிக்கண் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். முன்னதாக கடந்த வருடம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியான இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின்  முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகின் சிறந்த பாடல் ஆசிரியர்களில் ஒருவரான கார்த்திக் நேத்தா எழுதிய இதுவும் கடந்து போகும் என்ற முதல் பாடல்  இன்று வெளியானது. முன்னதாக இந்த பாடலின் ரிலீஸ் பற்றி வெளியிடப்பட்ட ஒரு ப்ரோமோ வீடியோ பாடகர் சிட் ஸ்ரீராமின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்துள்ள “இதுவும் கடந்து போகும்” பாடல்  இந்த கடினமான காலகட்டத்தில் மனம் சோர்ந்து இருக்கும் அனைவரையும் ஆறுதல்ப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அழகிய  பாடலின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.