சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, கடந்த மாதம் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் 

துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை, சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. 

இதனையடுத்து, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 2 ஆம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 போலீஸ் கைதிகளான செல்லதுரை, சாமத்துரை, வெயில் முத்து ஆகியோரை  பென்னிக்ஸ் கடை வைத்திருந்த பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்ற சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா ​தொற்று நேற்று உறுதியானது. இதனால், ஒரு நாளுக்கு முன்பாகவே 3 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதனால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் 2 பேரும், மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் ஈடுபட்ட மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் தற்போது கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சிபிஐ விசாரணை நடத்திய சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 10 போலீசாரிடமும் போலீசாரிடம் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன் தொடர்ச்சியாக தற்போது, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆய்வாளர் ஸ்ரீதருக்கு முதுகு பின் தண்டுவடத்தில் வலி அதிகமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் மதுரை மத்தியச் சிறையில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

அத்துடன், ஆய்வாளர் ஸ்ரீதர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவாரா? அல்லது சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவாரா? என்பது, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.