கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே வரும் மாதங்களில், இறுதி ஆண்டுக்கான இறுதி தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் பள்ளிக் கல்லூரிகளுக்குக் கடந்த 4 மாதங்களாகக் காலவரையற்ற விடுமுறை அமலில் உள்ளது. பள்ளிகளை, இப்போதைக்குத் திறக்கும் நோக்கம் இல்லையென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தேவும் விட்டார். அதேபோல நடக்கவிருந்த முழு ஆண்டு பரிட்சைகளும்கூட வேண்டாம் எனச் சொல்லப்பட்டுவிட்டது.

இருப்பினும், கல்லூரிகளுக்கு இப்படியான தேர்வு ரத்துகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கல்லூரிகள் திறப்பு குறித்தும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதற்கிடையில், நடப்பு 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்தும், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அதற்கேற்ப அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன் பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுத்துப் பரிந்துரை அளிக்கப் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்துள்ள பரிந்துரையில், ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து’ செய்ய வேண்டும் என்றும், அதில் ஈடுபாடு காட்டாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வு நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. அதேபோல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை அக்டோபர் மாதம் திறக்கவும் அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரைகளை ஆலோசித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் `தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா, அரசின் முடிவு என்ன?' என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, ‘பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இன்னும் இறுதி செய்யவில்லை.’ என்று.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் அப்போது பேசும்போது, ``பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ரத்துசெய்வது குறித்து இன்னும் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஆரம்பக்கட்ட ஆலோசனையைத் தொடங்கிவிட்டோம். இதில் முடிவெடுக்க கவர்னர், முதல்-அமைச்சரிடம் அனுமதி வாங்கவேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதனடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும். சிலநேரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் முடிவுகளை அப்படியே நாம் கையாளுவதும் இல்லை. சிலநேரங்களில் தளர்வும், சிலநேரங்களில் அதனை ஏற்றும் முடிவுசெய்கிறோம். எனவே தேர்வு ரத்துசெய்யப்படுவது குறித்து முடிவுகளை எடுத்து அறிவிப்பதற்குக் காலதாமதம் ஆகும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலையில் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

``* கலை, அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.

* பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. பி.இ., படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், எம்.இ., மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.

* எம்.சி.ஏ., படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

* மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,

* முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், 
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க  உத்தரவிட்டுள்ளேன்" எனக்கூறப்பட்டுள்ளது.

இவற்றோடு சேர்த்து, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே வரும் மாதங்களில், இறுதி ஆண்டுக்கான இறுதி தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பெ. மதலை ஆரோன்.