குற்ற வழக்கில் இருந்து பெயர் நீக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற செக்காணூரணி பெண் காவல் ஆய்வாளர் அனிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.  

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்து உள்ள பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அடிதடி வழக்கு மீதான குற்றப் பத்திரிக்கையில், நல்லதம்பியின் மகன் மாரி மற்றும் மருமகன் கமல்பாண்டியின் பெயர்கள் இடம் பெற்றன.

“இந்த குற்றப் பத்திரிக்கையில் நல்லதம்பி, தனது மகன் மற்றும் மருமகன் சம்பவத்தின் போது அந்த இடத்தில் இல்லை என்றும், சட்டப்படியாக அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்” என்று செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் அனிதாவிடம் முறையிட்டார். இதனையடுத்து, அவர்கள் இருவரது பெயரையும் நீக்க செக்காணூரணி பெண் காவல் ஆய்வாளர் அனிதா 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், தவணை முறையில் இந்த லஞ்சப் பணத்தைச் செலுத்துமாறு காவல் ஆய்வாளர் அனிதா கூறியதாகவும் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த நல்லதம்பி, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளார்.

அதன் படி, “ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நல்லதம்பியிடம் கொடுத்து உள்ளனர். அதனை வாங்கிய நல்லதம்பி, செக்காணூரணி பெண் காவல் ஆய்வாளர் அனிதாவிடம் அந்த பணத்தை லஞ்சமாகக் கொடுத்து உள்ளார்.

அந்த நேரத்தில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காவல் ஆய்வாளர் அனிதாவைக் கையும் களவுமாக அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் அனிதா மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேல் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, “வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க” நீதிபதி உத்தரவிட்டார். இதனால், காவல் ஆய்வாளர் அனிதா, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், “ஆய்வாளர் அனிதா வேறு வழக்குகளில் இதே போல் லஞ்சம் பெற்றுள்ளாரா?” என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த சபம்வம், தமிழக காவல் துறைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், குற்ற வழக்கில் இருந்து பெயர் நீக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற செக்காணூரணி பெண் காவல் ஆய்வாளர் அனிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். காவல் நிலைய ஆய்வாளர் அனிதாவை பணியிடை நீக்கம் செய்து, தென்மண்டல ஐ.ஜி. முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள சக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், நெல்லையில் மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் தாய் தற்கொலை செய்த வழக்கில், அதிரடி திருப்பமாக குற்றம்சாட்டப்படும் பெண் காவல் ஆய்வாளர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே, சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி உள்ளார். போலீசார் ஒருவர் திருடனை பிடித்த அந்த சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.