வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், டெல்லியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இதனால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்து, அந்த சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி நோக்கி நேற்றும், நேற்று முன் தினமும் டிராக்டரிலும், நடந்தும் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். எதிர்ப்பு காரணமாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் விதமாக டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு வருகின்றன. இதன் காரணமாக ஹரியானா, டெல்லி எல்லைகளை இழுத்து மூடப்பட்டு சீல் வைத்து பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தி வருகின்றனர். 

முக்கியமாக, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய போலீசாருடன், ஆளில்லா விமானம் வழியேயும் போராட்டக்காரர்களை போலீசார் தீவிரமாகக் கண்காணிக்கும் பணியிலும் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தலைநகர் டெல்லி நோக்கி வரும் விவசாயிகளைக் கலைந்து போக செய்யும் வகையில் டெல்லி போலீசாரின் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அதன் படி, டெல்லி நோக்கி வந்த விவசாயிகளை கலைந்து போக செல்லும் படி, போலீசார் கேட்டு கொண்டனர். இதனையடுத்து, பேரணியாக திரண்டு வந்த விவசாயிகள் மீது போலீசார் தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். அத்துடன், விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போலீசார், பேரணியைக் கலைக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், இன்று 3 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் டெல்லியில் வந்து போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். 

அதே நேரத்தில், போராட்டத்தை கை விட்டு பேச்சு வார்த்தைக்கு வரும் படி, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்து உள்ளார்.

அதன் படி, “வரும் டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சு வார்த்தைக்காக விவசாய சங்கங்களை அழைத்துள்ளோம் என்றும், அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்” என்றும், அவர் கூறினார்.

“தற்போது கொரோனா தொற்று பரவல், குளிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைபெறும் போராட்டத்தை விவசாயிகள் திரும்பப் பெற வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “விவசாயிகளின் பெயரில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும், அரசியல் கட்சிகளுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவுறுத்தினார்.

அதே போல், “மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல், உரிய அவகாசம் அளிக்காமல், அவசரம் அவசரமாக மத்திய அரசு  பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் முற்றிலும், விவசாயிகளின் நலனுக்கு எதிரானது” என்று, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது, மத்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வது இந்த சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும், பெரும் கார்ப்பரேட்டுகள் சந்தைகளில் அனுமதிக்கப்படுவதை ஏற்க மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து தான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது” என்றும், அவர் விளக்கம் அளித்தார். 

குறிப்பாக, “டெல்லியில் கடந்த 2 நாட்களாக போராடும் விவசாயிகள் மீது போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானம் அற்ற செயல் என்றும்,  அதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை திருவாரூரில் எங்கள் சங்கத்தின் சார்பாக அடையாளப்பூர்வமான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றும், அவர் பகிரங்கமாக அறிவித்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, “காவிரி டெல்டா உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆதரவு தரும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்றும், வரும் 3 ஆம் தேதி நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும், நல்ல தீர்வு வராத பட்சத்தில் நாங்களும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்” என்றும்,  பி.ஆர்.பாண்டியன் உறுதிப்படத் தெரிவித்தார்.