இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து உள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் படி, முதலில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன் படி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பொறுப்பாக விளையாடி 90 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சை எல்லா புறங்களிலும் பறக்க விட்ட ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள், நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினர். இதனால், 28 ஓவர்கள் வரை முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். இதில், கேப்டன் விராட் கோலி தனது பவுலிங் கூட்டணியை எல்லா விதங்களில் மாற்றியும், எந்த பலனும் அளிக்க வில்லை. இறுதியில் முகமது ஷமியின் பந்து வீச்சில், வார்னர் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

அத்துடன், முதல் 28 பந்துகளில் வெறும் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஸ்மித், அடுத்த 34 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

அதே போல் மறுமுனையில் ஆடிய ஆரோன் ஃபின்ச், 114 ரன்கள் அடித்து அசத்தினார். மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 19 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியில் 5 பவுலர்கள் இருந்தும், யாருடைய பந்து வீச்சும் எடுபடவில்லை. 

அதே நேரத்தில், இந்தியா சார்பில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைய வில்லை. இந்தியா முதல் 13.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. முக்கியமாக, கேப்டன் விராட் கோலி, ஷ்ரேயஸ“ அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இவர்களே வித்திட்டனர்.

குறிப்பாக, இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே நேற்று சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால், ரசிகர்களுக்கு இந்த போட்டி பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, “ஒட்டுமொத்தமாக அணியில் யாரும் சரியாக விளையாடவில்லை” என்று, அணியின் தோல்வி குறித்து பேசினார். 

அதே போல், “ஆஸ்திரேலியா உடனான அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடையும்” என்று, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 
மைக்கல் வாகன் கூறியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து உள்ளது.

இதற்கு காரணம், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் மிகவும் தாமதமாக ஓவர்களை வீசியதன் காரணமாக, இந்திய அணி வீரர்கள் தங்களுடைய ஆட்டத்துக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.